Thiruppugazh Song 129 – திருப்புகழ் பாடல் 129

திருப்புகழ் பாடல் 129 – பழநி
ராகம் – மோஹனம்; தாளம் – ஆதி (திஸ்ர நடை) (12)

தனன தனன தனன தனன
தனன தனன …… தனதான

கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய …… திரிசூலன்

கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி …… யெழுகாலந்

திரியு நரியு மெரியு முரிமை
தெரிய வரவி …… யணுகாதே

செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் …… தரவேணும்

பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு …… முருகோனே

பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி …… யமர்வோனே

அரிய மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை …… யெறிவோனே

அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய …… பெருமாளே.