திருப்புகழ் பாடல் 135 – பழநி
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா …… தனதான
கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ …… துவரோவாய்
களமு நீள்கமு கோதோள் வேயோ
உதர மானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ …… இடைதானும்
இழைய தோமலர் வேதா வானோ
னெழுதி னானிலை யோவாய் பேசீ
ரிதென மோனமி னாரே பாண …… ரெனமாதர்
இருகண் மாயையி ல்முழ் காதே
யுனது காவிய நூலா ராய்வே
னிடர்ப டாதருள் வாழ்வே நீயே …… தரவேணும்
அலைவி லாதுயர் வானோ ரானோர்
நிலைமை யேகுறி வேலா சீலா
அடியர் பாலரு ளீவாய் நீபார் …… மணிமார்பா
அழகு லாவுவி சாகா வாகா
ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
ரயலு லாவிய சீலா கோலா …… கலவீரா
வலபை கேள்வர்பி னானாய் கானார்
குறவர் மாதும னாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா …… மயில்வாழ்வே
மதுர ஞானவி நோதா நாதா
பழநி மேவுகு மாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் …… பெருமாளே.