Thiruppugazh Song 136 – திருப்புகழ் பாடல் 136

திருப்புகழ் பாடல் 136 – பழநி

தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன …… தனதான

கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய …… விலைமாதர்

கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருளைப் படியெனை யாளவு மேயருள் …… தரவேணும்

இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்முயி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய …… வடிவோனே

இதமிக் கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர …… முதல்வோனே

நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய …… சுடர்வேலா

நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு …… முரியோனே

பலவிற் கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய …… வகையாலே

பழனத் துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் …… பெருமாளே.