திருப்புகழ் பாடல் 145 – பழநி
ராகம் – கெளளை; தாளம் – ஆதி – 2 களை (16)
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன …… தனதான
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல …… கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை …… விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடு …… மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமு …… மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் …… வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் …… விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
செயம்பு வெனநட மிடுபத மழகியர் …… குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
செயங்கொ டணைகுக சிவமலை மருவிய பெருமாளே.