திருப்புகழ் பாடல் 148 – பழநி
தனன தனன தனன தனன தனன தனன
தனன தனன …… தனதான
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகளுலவ
கொலைகள் செயவெ …… களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி …… னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய …… மயில்போல
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் …… உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் …… அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி …… யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ …… முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு …… பெருமாளே.