திருப்புகழ் பாடல் 175 – பழநி
ராகம் – பாகேஸ்ரீ; தாளம் – அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1,
தகிட-1 1/2, தகதிமி-2
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன …… தனதான
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக …… அபிராம
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதனவுத் துங்க மானத …… எனவோதிச்
சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் …… வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தி யாரரு …… குறலாமோ
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுய …… அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான நான்முகனற் றந்தை சீதரன் …… மருகோனே
வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன …… முடையோனே
வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர் …… பெருமாளே.