Thiruppugazh Song 185 – திருப்புகழ் பாடல் 185

திருப்புகழ் பாடல் 185 – பழநி

தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான …… தனதான

முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார …… மடவார்தோள்

முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் …… தலைகீழ்வீழ்ந்

தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி …… மிகவேயுண்

டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான …… மருளாயோ

மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை …… விடுவோனே

வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபவனிரு கரதீர …… முருகோனே

பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு …… மிளையோனே

பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு …… பெருமாளே.