Thiruppugazh Song 190 – திருப்புகழ் பாடல் 190

திருப்புகழ் பாடல் 190 – பழநி

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன …… தனதான

முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
முறுவல்தர விரகமெழ …… அநுராகம்

முதிரவச மறவிதரி யெழுவகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு …… துளிவீச

அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் …… குழையேற

அமளிபடு மமளிமல ரணையின் மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை …… மறவேனே

நிருதனொடு வருபுரியு மடுகரியும் ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் …… வடிவேலா

நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககனமுக …… டுறைவோனே

வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவினிரை பெருகுவளி …… மலைமீதே

வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
மருவிமகிழ் பழநிவரு …… பெருமாளே.