Thiruppugazh Song 208 – திருப்புகழ் பாடல் 208

திருப்புகழ் பாடல் 208 – சுவாமி மலை
ராகம் – மோஹனம்; தாளம் – திஸ்ர்ருபகம் (5)

தனாதனன தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் …… தனதான

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ் …… சமனாருங்

கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் …… கதைபோலும்

இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் …… கிதமாகும்

இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் …… படிபாராய்

விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் …… பெருவாழ்வே

விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் …… கெறிவோனே

தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம் …… புலனோடுஞ்

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் …… பெருமாளே.