திருப்புகழ் பாடல் 270 – திருத்தணிகை
ராகம் – சாமா ; தாளம் – ஆதி 2 களை
(எடுப்பு – 3/4 இடம்)
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன …… தனதான
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல …… வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ …… தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர …… மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் …… புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு …… தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி …… கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை …… பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள் …… பெருமாளே.