திருப்புகழ் பாடல் 295 – திருத்தணிகை
தனதனன தனதந்த தனதனன தனதந்த
தனதனன தனதந்த …… தனதான
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க …… அமுதான
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற …… லணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் …… ப்ரியமேகூர்
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
கவலைகெட நினதன்பு …… பெறுவேனோ
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
அதிரவெடி படஅண்ட …… மிமையோர்கள்
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று …… பொரும்வேலா
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற …… பெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையி லுறைகின்ற …… பெருமாளே.