திருப்புகழ் பாடல் 315 – காஞ்சீபுரம்
ராகம் – தோடி; தாளம் – ஆதி
(எடுப்பு – 1/2 இடம்)
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான
கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன் …… தனிவீரக்
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் …… தமிழ்பாடிக்
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் …… றிலதான
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் …… கிடையாதோ
பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் …… றையும்வேணிப்
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் …… கயவாவி
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் …… திருவான
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் …… பெருமாளே.