திருப்புகழ் பாடல் 316- காஞ்சீபுரம்
ராகம் – ஷண்முகப்ரியா; தாளம் – ஆதி
(எடுப்பு – 1/2 இடம்)
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் …… சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் …… படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் …… பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் …… றருள்வாயே
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் …… சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் …… கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் …… ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் …… பெருமாளே.