Thiruppugazh Song 321 – திருப்புகழ் பாடல் 321

திருப்புகழ் பாடல் 321 – காஞ்சீபுரம்

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன …… தனதான

சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு …… தந்தைதாயும்

தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு
தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் …… வந்திடாமுன்

பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண
படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் …… வென்றிவேலா

பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட …… வந்திடாயோ

சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு
சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி …… திண்கையாளி

திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்
திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு …… கின்றஞானக்

கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் …… கஞ்சபாதங்

கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு
கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் …… தம்பிரானே.