திருப்புகழ் பாடல் 347 | Thiruppugazh Song 347

திருப்புகழ் பாடல் 347 – காஞ்சீபுரம் : மக்கட்குக் கூறரி | Thiruppugazh Song 347

ராகம் – லதாங்கி
தாளம் – திஸ்ர த்ருபுடை (7)

தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன – தனதான

பாடல்

மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது – மனதாலே

மட்டிட்டுத் தேடவோ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி – மதிசூடும்

முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானது – பெறலாகா

முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது – புரிவாயே

செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல் – வெகுரூபம்

சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக – முதுசோரி

கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரப யோதர – முலையாள்முன்

கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !