திருப்புகழ் பாடல் 359 – திருவானைக்காவல்: ஓல மறை | Thiruppugazh Song 359
ராகம் – ஹம்ஸாநந்தி
தாளம் – அங்கதாளம் (7 1/2)
தகிட – 1 1/2, தகிட – 1 1/2, தகதகிட – 2 1/2, தகதிமி – 2
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன – தனதான
பாடல்
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ – ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது – சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ – னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் – பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெளி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் – களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ – வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை – த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !