திருப்புகழ் பாடல் 61 – திருச்செந்தூர்
ராகம் – பீம்பளாஸ்; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)
(எடுப்பு – அதீதம்)
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் …… தனதான
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் …… குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் …… றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோ ய்
வண்கா யம்பொய்க் …… குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் …… கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் …… குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் …… கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் …… புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் …… பெருமாளே.