திருப்புகழ் பாடல் 78 – திருச்செந்தூர்
ராகம் – தேவகாந்தாரி ; தாளம் – சதுஸ்ர அட (12)
(எடுப்பு 1/2 இடம்)
தனதன தனதன தந்தத் தந்தத் …… தனதானா
பரிமள களபசு கந்தச் சந்தத் …… தனமானார்
படையம படையென அந்திக் குங்கட் …… கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் …… குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் …… றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் …… றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் …… தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் …… குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் …… பெருமாளே.