திருப்புகழ் பாடல் 89 – திருச்செந்தூர்
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன …… தனதான
மான்போற்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சாற்பண் பாடு மக்களை
வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு …… முலைமாதர்
வாங்காத்திண் டாடு சித்திர
நீங்காச்சங் கேத முக்கிய
வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு …… மொழியாலே
ஏன்காற்பங் காக நற்புறு
பூங்காற்கொங் காரு மெத்தையில்
ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண …… முதல்நீதா
ஈந்தாற்கன் றோர மிப்பென
ஆன்பாற்றென் போல செப்பிடும்
ஈண்டாச்சம் போக மட்டிக …… ளுறவாமோ
கான்பாற்சந் தாடு பொற்கிரி
தூம்பாற்பைந் தோளி கட்கடை
காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் …… அசுரேசன்
காம்பேய்ப்பந் தாட விக்ரம
வான்றோய்க்கெம் பீர விற்கணை
காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் …… மருகோனே
தீம்பாற்கும் பாகு சர்க்கரை
காம்பாற்செந் தேற லொத்துரை
தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் …… புதல்வோனே
தீண்பார்க்குன் போத முற்றுற
மாண்டார்க்கொண் டோ து முக்கிய
தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் …… பெருமாளே.