திருப்புகழ் பாடல் 90 – திருச்செந்தூர்
தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த …… தனதான
முகிலாமெனு மளகங் காட்டி
மதிபோலுயர் நுதலுங் காட்டி
முகிழாகிய நகையுங் காட்டி …… அமுதூறு
மொழியாகிய மதுரங் காட்டி
விழியாகிய கொடியுங் காட்டி
முகமாகிய கமலங் காட்டி …… மலைபோலே
வகையாமிள முலையுங் காட்டி
யிடையாகிய கொடியுங் காட்டி
வளமானகை வளையுங் காட்டி …… யிதமான
மணிசேர்கடி தடமுங் காட்டி
மிகவேதொழி லதிகங் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றி …… லுழல்வேனே
நகையால்மத னுருவந் தீத்த
சிவனாரருள் சுதனென் றார்க்கு
நலநேயரு ளமர்செந் தூர்க்கு …… ளுறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
தனமாதெனு மிபமின் சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு …… முருகோனே
அகமேவிய நிருதன் போர்க்கு
வரவேசமர் புரியுந் தோற்ற
மறியாமலு மபயங் காட்டி …… முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
யடையாமென இனிதன் பேத்து
மமரேசனை முழுதுங் காத்த …… பெருமாளே.