ஸ்ரீமங்களாஷ்டகம்
மங்களங்கள் பெருக, மனக் குறைவின்றி, பாவங்களிலிருந்து விலகி, நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட
பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.
சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.
மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.
விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.
கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.
அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.
சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.