Abirami Andhathi Lyrics in Tamil – Songs 11 to 20

இல்வாழ்கை இன்பம் நிலைத்திட

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் மூடிக் கண்ணியதே. 11

தியானத்தில் மனம் ஒருமைப்பட

கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏதுவன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.12

மனோதிடம் பெற்றிட

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே. 13

முதன்மை ஏதிலும் பெற

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே. 14

அழியாசெல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக்கொன்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுக்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15

சிறந்த ஆற்றல் பெற

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒலிகிடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்கள் ஆகி விரித்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே. 16

கன்னிகைகளுக்கு நல்ல வரன் கிட்ட

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே. 17

பயம் அகல

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும்போது வெளிநிற்கவே. 18

பேரின்பம் உண்டாக

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19

வீடு, மனை முதலியன கிட்ட

உறைகின்ற நின் திருகோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே. 20