இறை அடியார் நட்புகிட்ட
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி எங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41
இவ்வுலகம் நமக்கு உதவிட
இடங்கொண்டு விம்மி இணைகொண்டிறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே. 42
தீமையெல்லாம் நீங்க
பரிபுரச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேணியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43
மனநலம் சீராக
தவளே இவள் எங்கள் சங்கரனார்மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. 44
வீண் பழிகள் நீங்கிட
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டுசெய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மீண்டு செய்தாலும் பொறுக்கைநன்றே பின் வெறுக்கை அன்றே. 45
தீய பழக்கங்கள் விலகிட
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகமை புதியதன்றே புது நஞ்சை உண்டு
கருக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே.46
யோகசித்தி பெற
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்தது சுடர்கின்றதே.47
உடல்பற்று நீங்க
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப் போதிருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் நோயும் குரம்பையிலே.48
யம பயம் நீங்க
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.49
அம்பிகையின் தரிசனம் பெற
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50