பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 4 – சர்க்கரை | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil

பாகம் 4 – சர்க்கரை:

நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம். அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.

மாதமும் தின வாரமும் திதி
யோகமும் பல நாள்களும் படர்
மாதிரம் திரி கோள்களும் கழல்
பேணும் அன்பர்கள் பால் நலம் தர

வற்சலம் அதுசெயும் அருட்குணா
சிறந்த விற்பனர் அகக்கணா
மற்புய அசுரரை ஒழித்தவா
அனந்த சித்துரு எடுத்தவா

மால் அயன் சுரர்கோனும் உம்பர்
எலாரும் வந்தனமே புரிந்திடு
வானவன் சுடர் வேலவன் குரு
ஞான கந்தபிரான் எனும்படி

மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறும் இகல் அயில் பிடித்தவா
சிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.

நாத இங்கித வேதமும் பல்
புராணமும் கலைஆகமங்களும்
நாத உன் தனி வாயில் வந்தனவே
எனுந்துணிபே அறிந்தபின்

நச்சுவது இவண்எது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
நட்புடை அருளமிழ்து உணில் சதா
சிறந்த துத்தியை அளிக்குமே

நாளும் இன்புஉயர் தேனினும் சுவை
ஈயும் விண்டலமே வரும் சுரர்
நாடியுண்டிடு போஜனம் தனி
லேயும் விஞ்சிடுமே கரும்பொடு

நட்டம் இன் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.

பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை
மீதலம் தனி லேயும் வண்டு அறு
பூ மலர்ந்தவு னாத வம்பத
நேயம் என்பதுவே தினம் திகழ்

பொற்புறும் அழகது கொடுக்குமே
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை அறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே

பூரணம் தருமே நிரம்பு எழில்
ஆதனம் தருமேஅணிந்திடு
பூடணம் தருமே இகந்தனில்
வாழ்வதும் தருமே உடம்பொடு

பொக்கறு புகழினை அளிக்குமே
பிறந்து செத்திடல் தொலைக்குமே
புத்தியில் அறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.

சீதளம் சொரி கோதில் பங்கயமே
மலர்ந்திடு வாவி தங்கிய
சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி
ஏரகம் பரபூத ரம்சிவ

சித்தரும் முனிவரும் வசித்த
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம்
இருந்து அளித்தருள் அயில் கையா

தேன் உறைந்திடு கான கந்தனில்
மானிளம் சுதையால் இரும் சரை
சேர் உடம்பு தளாட வந்த
சன்யாச சுந்தரரூப அம்பர

சிற்பர வெளிதனில் நடிக்குமா
அகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.