காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம்
கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம்
நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம்
வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம்
வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம்
வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம்
வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின் தரிசனம் (காற்)
பாவங்கள் என்று தெரிந்திருந்தாலும் விலகிட முடியாமல்
பாசங்கள் பந்தங்கள் நேசங்கள் யாவும் மறுத்திட இயலாமல்
கோபங்கள் தாபங்கள் மீறிட நாங்கள் குறைத்திட முடியாமல்
குணங்களில் இருள்வரப் பகலிலும் எங்கள் பொழுதும் விடியாமல்
இத்தனைபாவம் யாவையும் போக்கும் சாமியே சரணம்
சத்தியமாக சத்தியம் காக்கும் சாமியே சரணம்
பூமியில் எங்களின் புகலிடம் ஒன்று உன்திருவடி சரணம் (காற்)
நீலிமலையிலும் நிழலென வந்து ஏற்றிவிடென் ஐயா
நேரில்காணும் ஏற்றத்தில் எங்களைத் தூக்கி விடென் ஐயா
பாதம் தளர்ந்திட பசியது கூடிட பார்த்திடும் என்ஐயா
பாடும் பாவிலும் படித்திடும் நாவிலும் இருந்திடு என் ஐயா
வாடிமெலிந்து வருகிற எங்களைக் காத்திடும் என்ஐயா
நாடி ஒடுங்கி நடந்திடும் நாங்கள் நம்பிய என்ஐயா (காற்)
மலையினில் ஏறிடும் மணிகண்டசாமிக்கு துணையது நீ ஐயா
தேகம் தளர்ந்தாலும் திந்தகத்தோம் எனப்பாடுகிறோம் ஐயா
இருமுடி ஏந்தும் தலைமுதல் கால்வரை இருந்திடு என் ஐயா
வழித்துணை நீயென வந்திடும் சுவாமிகள் வணங்கிடும் என் ஐயா
பாதபலம்தா தேகபலம்தா பம்பாவாசனே
பாவங்களோடிட பார்த்திடும் நாங்கள் நம்பிய தேவனே (காற்)