கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல்விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்: