திருநீற்றுத்துதி
ஸ்காந்தபுராணம் கூறும் திருநீற்று திதி – திருமகளின் அருள் சேர தினமும் சொல்லவும்.
தரித்துக் கொண்ட உடனே எல்லா பாவங்களையும் போக்கவல்லது விபூதி. அதை ஜபிப்பதாலும், சிறிதளவு உட்கொள்வதாலும், பூசிக்கொள்வதாலும் எல்லா சுகங்களையும் அளிப்பது. எல்லாவற்றையும் தரக்கூடியது என்பதாலேயே அதற்கு பஸ்மம் என்ற பெயர் ஏற்பட்டது.
உரிய மந்திரங்களைச் சொல்லி சரியான முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை எவனொருவன் தரிக்கிறானோ, அவனுடைய எல்லா பாவங்களும் விலகுவதோடு அவனுடைய எல்லா விருப்பங்களும் கைகூடலாகும்.
பார்வதியின் பதியான பரமேஸ்வரனுடைய மகிமையை எப்படி எவராலும் அறிய முடியாதோ, அவ்வாறே திருநீறின் உயர்வையும் எவராலும் அறிய முடியாது என்பது வேத வேதாந்தங்களில் கரை கண்ட பெரியோர்களின் வாக்கு.
முனிவர்களுக்கு விபூதியின் மகிமையை உபதேசிக்கும் விதமாக இந்தத்துதி அமைந்திருப்பதால், முனிவர்களே என்றழைத்து கூறப்பட்டுள்ளது. இதையே நமக்கான உபதேசமாகவும் கொள்ளவேண்டும்.
மனித ஆன்மாக்களே, திருநீறை நீரில் குழைத்து நெற்றி, கழுத்து, மார்பு, வயிறின் இருபக்கங்கள், தோள்கள், கைகளின் மேல்பாகம், கைகளின் நடுபாகம், மணிக்கட்டுகள், முதுகு, பிடரி ஆகிய பதினைந்து இடங்களிலும் மூன்று கோடுகளாக தரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மும்மூர்த்திகள் உள்ளிட்ட எல்லோராலும் வணங்குவதற்குரிய பெருமையைப் பெற்றவர்களாவார்கள். சகல செல்வங்களும் அவர்களைத் தேடிவந்து சேரும். திருமகள் அருள் பரி பூரணமாகக் கிட்டும்.