நமசிவாய தெய்வம் சிவன் பாடல் வரிகள் | Namashivaya Deivam Song Lyrics

வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய நமசிவாய தெய்வம் சிவன் பாடல் வரிகள் | Namashivaya Deivam Song Lyrics

நமசிவாயத் தெய்வம் நானறிந்த தெய்வம்!
சமயத்தில் துணைவரும் சதாசிவத் தெய்வம்!
இமையோர்கள் ஏத்தும் எழுல்மிகு தெய்வம்!
உமைதேவி ஓர்பாகமான அன்புத் தெய்வம்!

பிறவிப் பிணிதீர்க்கும் பெருந்துறைத் தெய்வம்!
புலியூரில் வாழும் பொற்சபைத் தெய்வம்!
அறிவாற்சிவனான ஆளுடை அடிகளை
அருகினில் கொண்ட அம்பலத் தெய்வம்!

சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!
பதஞ்சலி புலிப்பாணி போற்றும் தெய்வம்!
நிதம் சுகம் வாழ்வில் வளர்க்கும் தெய்வம்!
பதம் சொல் யாவையும் கடந்திடும் தெய்வம்!

நால்வர் நெஞ்சில் நிலைத்திட்ட தெய்வம்!
பால்போல் மனங்களில் பதிந்திடும் தெய்வம்!
வேல்விழி உமையாள் வணங்கும் தெய்வம்!
கால்தூக்கி ஆடும் கனகசபைத் தெய்வம்!

மறையீறும் அறியா முழுமுதல் தெய்வம்!
மூவருடன் தேவாசுரர் தொழுதிடும் தெய்வம்!
பிறைமதி உயிர்வாழ அருள்தந்த தெய்வம்!
பிறப்பும் இறப்பும் அற்றதோர் தெய்வம்!

ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வம்!
வேதம் நால்வர்க்கு ஓதிய தெய்வம்!
காதில் குழையுடன் தோடுடைத் தெய்வம்!
ஜோதி வடிவமாய் நின்றிடும் தெய்வம்!

பாண்டியனாய் மதுரையை ஆண்ட நல் தெய்வம்!
மீண்டும் வாரா வழியருள் தெய்வம்!
வேண்டுவோர் வேண்டுபவை வழங்கிடும் தெய்வம்!
தாண்டவ மூர்த்தியாய் திகழ்ந்திடும் தெய்வம்!

ஆலமுண்டு அமரர்க்கு அமுதீந்த தெய்வம்!
மாலுக்கு ஆழியை மகிழ்ந்தளித்த தெய்வம்!
பாலனுக்குப் பாற்கடல் பரிந்தளித்த தெய்வம்!
காலமெல்லாம் நம்மைக் காத்திடும் தெய்வம்!

பரிமேல் அழகனாய் விளங்கிய தெய்வம்!
கரியின் உரியைப் போர்த்திடும் தெய்வம்!
அரிவை பாதியாய் அமைந்திடும் தெய்வம்!
புரியாத பொருளாய் இருந்திடும் தெய்வம்!

கற்றார்க்கும் கல்லார்க்கும் உற்றதோர் தெய்வம்!
பெற்றவனாய் உயிர்களைக் காத்திடும் தெய்வம்!
போற்றினும் தூற்றினும் பொறுத்திடும் தெய்வம்!
ஐம்பெறும் பூதமாய் விளங்கிடும் தெய்வம்!

நம்பினோர்க்கு என்றும் நலமருளும் தெய்வம்!
இம்மைக்கும் மறுமைக்கும் துனைவரும் தெய்வம்!
மும்மை மலமறுத்து முக்திதரும் தெய்வம்!
வாயற்ற உயிர்களையும் வாழ்விக்கும் தெய்வம்!
பேய் என்ற போதினிலும் பொறுத்தருளும் தெய்வம்!
மாயப் பிறப்பறுக்கும் மகாதேவ தெய்வம்!
தாயாக மாறிவரும் தந்தையந்த தெய்வம்!
சிலந்திக்கும் குருவிக்கும் சிறப்பளித்த தெய்வம்!

வலம்தந்த குரங்கிறகு வாழ்வளித்த தெய்வம்!
எலியொன்று திரி தீண்ட உலகாளும் புலியாக
நில உலகில் புகழ்வீச வரம் தந்த தெய்வம்!
கல்லினுள் தேரைக்கும் கதியான தெய்வம்!

கருவான உயிருக்குப் பொருளான தெய்வம்!
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம்!
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம்!
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம்!

நெடியோனும் மலரவனும் காணாத தெய்வம்!
முடிவும் முதலுமாய் இருந்திடும் தெய்வம்!
வடிவென்று ஒன்றும் இல்லாத தெய்வம்!
எண்ணும் எழுத்துமாய் இருந்திடும் தெய்வம்!

இசையும் பொருளுமாய் இருந்திடும் தெய்வம்!
கண்ணின் மணியாய்க் காக்கும் தெய்வம்!
கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்!
உரைகள் கடந்து உயர்ந்திடும் தெய்வம்!

வரையின்றிக் கருணை பொழிந்திடும் தெய்வம்!
விரிசடையில் நதியேற்று உயிர்காத்த தெய்வம்!
இருசுடரைக் கண்களாய் கொண்டிடும் தெய்வம்!
அன்பர்கள் குறைதீர்க்க அவனிவந்த தெய்வம்!

துன்பங்கள் யாவும் இன்பமாக்கும் தெய்வம்!
புன்னகை ஒன்றால் புரமெரித்த தெய்வம்!
இன்னருள் காட்டியே ஏற்றம் தந்த தெய்வம்!
மன்மதன் பிழை பொறுத்து உயிர் அளித்த தெய்வம்!

என்பினை மாலையாய் ஏற்றிடும் தெய்வம்!
இன்னிசைப் பாடலில் இசைந்திடும் தெய்வம்!
பெண்ணாகி ஆணாகி அலியாகும் தெய்வம்!
ஓம்சிவம் சிவமென ஒலிக்கும் சிலம்பில்

நாம்துணை துணையென நவின்றிடும் தெய்வம்!
இராமனும் கண்ணனும் வணங்கிடும் தெய்வம்!
காமரூபம் அந்த சோமநாத தெய்வம்!
வித்தேதும் இன்றியே விளைத்திடும் தெய்வம்!

பக்தரின் சித்தமெல்லாம் பரவிடும் தெய்வம்!
நித்தம் ஒரு கோலம் கொண்டிடும் தெய்வம்!
தத்துவத்தின் பொருளாய்த் திகழ்ந்திடும் தெய்வம்!
பார்மீதில் பலபொருளாய் திகழ்ந்திடும் தெய்வம்!

யாரான போதும் அருள்தரும் தெய்வம்!
பேராயிரம் கொண்ட பெரியதோர் தெய்வம்!
வராத நெறிகாட்டிச் சேர்த்திடும் தெய்வம்!
முன்னைப் பழம்பொருட்கும் முற்பட்ட தெய்வம்!

மூவரையும் யவரையும் படைத்திடும் தெய்வம்!
ஐந்தொழில் புரிந்திடும் ஆதிமுதல் தெய்வம்!
அறிவுக்கு எட்டாத அம்மையப்ப தெய்வம்!
கணபதி என்னும் குழந்தையான தெய்வம்!

மணக்கோலம் கொண்ட சுந்தரேச தெய்வம்!
சின்மய ரூபம் கொண்ட யோகியான தெய்வம்!
பெண்ணொரு பாகம் கொண்ட போகி அந்தத் தெய்வம்!
ஓங்காரப் பொருளாய் ஒளிர்ந்திடும் தெய்வம்!

ஆங்காரம் தவிர்த்திடும் ஏகாந்த தெய்வம்!
நினைக்காத போதும் நலமருள் தெய்வம்!
அனைத்துலகும் ஈன்ற அன்புமயத் தெய்வம்!
நல்லவர் நாடிநிற்கும் நமசிவாய தெய்வம்!

நாளும் என் நெஞ்சில் வளர்ந்திடும் தெய்வம்!
பாலில் நெய்போல பரந்துள்ள தெய்வம்!
வேலனாகி வந்து நின்று விளையாடும் தெய்வம்!
எங்கும் எப்போதும் உடன்வரும் தெய்வம்!

எதிலும் சிவகாமி நிறைந்திடும் தெய்வம்!
ஒருமுறை சொன்னாலும் உயர்வருளும் தெய்வம்!
உள்ளத் தூய்மையைத் தந்திடும் தெய்வம்!
உலகெல்லாம் தானாய் ஓங்கிடும் தெய்வம்!

தென்பால் ஆடும் தெய்வமே பொற்றி போற்றி!
அன்பால் உன்னைத் துதித்தேன் போற்றி போற்றி!
உன்பால் நான் என்றும் போற்றி போற்றி!
எனை ஆட்கொள் ஈசனே போற்றி போற்றி!