நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவம்!!!

வருடம் முழுவதும் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நிறைந்த நாடு தான் நமது இந்தியா என்பதை நாம் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு இந்து திருவிழாவிற்கு பின்னணியிலும் சரியான காரணம், அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் உள்ளது. இந்தியாவிலுள்ள இந்து பண்டிகைகளில் அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று தான் நவராத்திரி திருவிழா. 9 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு முக்கியத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது.

பெயருக்கு ஏற்றது போல், “நவராத்திரி” திருவிழா என்பது மிக குதூகலத்துடனும், சமயஞ்சார்ந்த பக்தியுடனும் நாடு முழுவதும் 9 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புகழ் பெற்ற இந்த இந்து பண்டிகை வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது; ஒன்று சித்திரை மாதத்தில் (மார்ச்-ஏப்ரல் மாதத்தில்), மற்றொன்று ஐப்பசி மாதத்தில் (செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில்). துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படும் திருவிழாவே நவராத்திரி. மற்ற இந்திய திருவிழாக்களைப் போல நவராத்திரி திருவிழாவும் கூட விசேஷ அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் விசேஷ அர்த்தம் உள்ளது

நவராத்திரியின் 9 நாட்களில், ஒவ்வொரு நாளும் 9 வெவ்வேறு வடிவிலான துர்க்கை அம்மனுக்கு அர்பணிக்கபடுகிறது. நவராத்திரியின் 9 நாட்களிலும் தனித்துவமான பெயர்களோடு துர்க்கை அம்மன் வழிபடப்படுவார். ஒவ்வொரு நாளின் போதும் புதிய தோற்றம், நற்பதமான பாத்திரம் மற்றும் புதிய பொறுப்பை கடவுள் எடுக்கிறார். நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவமும் சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். அப்படிப்பட்ட ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

நவராத்திரியின் முதல் நாள்
நவராத்திரியின் முதல் நாளன்று துர்க்கை அம்மன் “ஷைல்புத்ரி” வடிவத்தை பெறுவார். இவர் இமயமலையின் மகளாக கருதப்படுகிறார். இவர் சிவனின் மனைவியான சக்தி தேவியின் மற்றொரு வடிவமாகும்.

நவராத்திரியின் இரண்டாவது நாள்
நவராத்திரியின் இரண்டாவது நாளன்று துர்க்கை அம்மன் “பிரம்மச்சாரினி” வடிவத்தை எடுப்பார். “பிரம்மா” என்ற வார்த்தையில் இருந்து இப்பெயர் வந்தது. அதற்கு தவம் அல்லது தபஸ் என அர்த்தமாகும். பிரம்மச்சாரினி என்பது பார்வதி தேவியின் பல வடிவங்களில் ஒன்றாகும்.

நவராத்திரியின் மூன்றாவது நாள்
நவராத்திரியின் மூன்றாவது நாளன்று துர்க்கை அம்மன் “சந்திரகாந்தா” வடிவத்தை எடுப்பார். சந்திரகாந்தா என்பது தைரியத்தையும் அழகையும் குறிக்கும்.

நவராத்திரியின் நான்காவது நாள்
நவராத்திரியின் நான்காவது நாளன்று துர்க்கை அம்மன் “குஷ்மந்தா” வடிவத்தை எடுப்பார். புராணங்களின் படி, தன் ஏளன சிரிப்பின் மூலம் இந்த ஒட்டுமொத்த அண்டத்தையும் குஷ்மந்தா உருவாக்கினார் என கூறப்படுகிறது. அதனால் அண்டத்தை உருவாக்கியவராக அவர் வழிப்படப்படுகிறார்.

நவராத்திரியின் ஐந்தாவது நாள்
நவராத்திரியின் ஐந்தாவது நாளன்று “கந்த மாலா” என்ற மற்றொரு நற்பதமான வடிவத்தை எடுப்பார் துர்க்கை அம்மன். கந்த மாலா என்ற பெயருக்கான காரணம் இது தான்: கடவுள்களின் ராணுவத்திற்கு போர் வீரர் தலைவரான கந்தாவின் தாயே இவர்.

நவராத்திரியின் ஆறாவது நாள்
நவராத்திரியின் ஆறாவது நாளன்று “கட்யயாணி” வடிவத்தை எடுப்பார். சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் கட்யயாணி நான்கு கைகளையும் மூன்று கண்களையும் கொண்டுள்ளார்.

நவராத்திரியின் ஏழாவது நாள்
நவராத்திரியின் ஏழாவது நாளன்று துர்க்கை அம்மனை “காளராத்ரி”யாக வணங்குவார்கள். காளராத்ரி என்றால் அடர்ந்த இருட்டு என அர்த்தமாகும். இந்த நாளன்று, தன் பக்தர்களுக்கு இவர் தைரியத்தை அளிப்பார். காளராத்ரி சிலைக்கு 4 கைகள் இருக்கும்.

நவராத்திரியின் எட்டாவது நாள்
எட்டாம் நாளன்று, துர்க்கை அம்மனை “மகா கௌரி”-யாக வணங்குவார்கள். இந்த வடிவத்திலான துர்க்கை அம்மன் மிகவும் அழகாகவும், வெண்பனியைப் போல் வெள்ளையாகவும் இருப்பார் என நம்பப்படுகிறது. இந்த நாளன்று, மகா கௌரியை வெண்ணிற நகைகளால் அலங்கரிப்பார்கள். அமைதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மகா கௌரி ஞானத்தை வெளிப்படுத்துவார்.

நவராத்திரியின் ஒன்பதாவது நாள்

நவராத்திரியின் கடைசி நாளன்று “சித்திதட்ரி” வடிவத்தை எடுப்பார் துர்க்கை அம்மன். 8 சித்திகளையும் சித்திதட்ரி உள்ளடக்கியுள்ளது என கூறப்படுகிறது. தாமரை மீது சித்திதட்ரி வசித்திருப்பார் என கூறப்படுகிறது. அனைத்து சாதுக்கள், யோகிகள் மற்றும் சித்தர்களால் இவர் வணங்கப்படுவார்.

மேற்கூறிய அனைத்தும் நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குகிறது. முதல் 6 நாளன்று, வீட்டில் நவராத்திரி பூஜை நடைபெறும். 7-ஆவது நாள் முதல், கொண்டாட்டங்கள் திருவிழா கோலத்தை பெறும். ஒட்டுமொத்த சூழலும் நவராத்திரி கொண்டாட்டங்களால் சூழ்ந்திருக்கும்.