Thayumanavar Songs – நினைவு ஒன்று

17. நினைவு ஒன்று

நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார்
நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளட்டுந்
தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல்
தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம்
பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம்
பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான்
மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த
வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே. 1.

ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த
குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்
கருமொழியிங் குனக்கில்லை மொழிக்குமொழி ருசிக்கக்
கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங்கண்டனைமேல்
தருமொழியிங் குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்
தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே. 2.

நில்லாத ஆக்கைநிலை யன்றனவே கண்டாய்
நேயஅருள் மெய்யன்றோ நிலயமதா நிற்கக்
கல்லாதே ஏன் படித்தாய் கற்றதெல்லாம் மூடங்
கற்றதெல்லாம் மூடமென்றே கண்டனையும் அன்று
சொல்லாலே பயனில்லை சொல்முடிவைத் தானே
தொடர்ந்துபிடி மர்க்கடம்போல் தொட்டதுபற் றாநில்
எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண் டடிநீ
இராப்பகலில் லாவிடமே எமக்கிடமென் றறிந்தே. 3.

இடம்பொருளே வலைக்குறித்து மடம்புகுநா யெனவே
எங்கேநீ யகப்பட்டா யிங்கேநீ வாடா
மடம்பெறுபாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை
மன்னிடமே இடம்அந்த மாநிலத்தே பொருளுந்
திடம்பெறவே நிற்கினெல்லா உலகமும்வந் தேவல்
செய்யுமிந்த நிலைநின்றோர் சனகன்முதல் முனிவர்
கடம்பெறுமா மதயானை என்னவுநீ பாசக்
கட்டான நிகளபந்தக் கட்டவிழப் பாரே. 4.

பாராதி யண்டமெலாம் படர்கானற் சலம்போல்
பார்த்தனையே முடிவில்நின்று பாரெதுதான் நின்ற
தாராலும் அறியாத சத்தன்றோ அதுவாய்
அங்கிருநீ எங்கிருந்தும் அதுவாவை கண்டாய்
பூராய மாகவுநீ மற்றொன்றை விரித்துப்
புலம்பாதே சஞ்சலமாப் புத்தியைநாட் டாதே
ஓராதே ஒன்றையுநீ முன்னிலைவை யாதே
உள்ளபடி முடியுமெலாம் உள்ளபடி காணே. 5.

உள்ளபடி யென்னவுநீ மற்றொன்றைத் தொடர்ந்திட்
டுளங்கருத வேண்டாநிட் களங்கமதி யாகிக்
கள்ளமனத் துறவைவிட்டெல் லாந்துறந்த துறவோர்
கற்பித்த மொழிப்படியே கங்குல்பக லற்ற
வெள்ளவெளிக் கடல்மூழ்கி யின்பமயப் பொருளாய்
விரவியெடுத் தெடுத்தெடுத்து விள்ளவும்வா யின்றிக்
கொள்ளைகொண்ட கண்ணீருங் கம்பலையு மாகிக்
கும்பிட்டுச் சகம்பொயெனத் தம்பட்ட மடியே. 6.

அடிமுடியும் நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டால்
அத்துவித ஆனந்த சித்தமுண்டாம் நமது
குடிமுழுதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த
கோலமெல்லாம் நன்றாகுங் குறைவுநிறை வறவே
விடியுமுத யம்போல அருளுதயம் பெற்ற
வித்தகரோ டுங்கூடி விளையாட லாகும்
படிமுழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப்
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் வருமே. 7.

வரும்போமென் பனவுமின்றி யென்றுமொரு படித்தாய்
வானாதி தத்துவத்தை வளைந்தருந்தி வெளியாம்
இரும்போகல் லோமரமோ என்னும்நெஞ்சைக் கனல்மேல்
இட்டமெழு காவுருக்கும் இன்பவெள்ள மாகிக்
கரும்போகண் டோசீனி சருக்கரையோ தேனோ
கனியமிர்தோ எனருசிக்குங் கருத்தவிழ்ந்தோ ருணர்வார்
அரும்போநன் மணங்காட்டுங் காமரசங் கன்னி
அறிவாளோ அபக்குவர்க்கோ அந்நலந்தான் விளங்கும். 8.

தானேயும் இவ்வுலகம் ஒருமுதலு மாகத்
தன்மையினாற் படைத்தளிக்குந் தலைமையது வான
கோனாக வொருமுதலிங் குண்டெனவும் யூகங்
கூட்டியதுஞ் சகமுடிவிற் குலவுறுமெய்ஞ் ஞான
வானாக அம்முதலே நிற்குநிலை நம்மால்
மதிப்பரிதாம் எனமோனம் வைத்ததும்உன் மனமே
ஆனாலும் மனஞ்சடமென் றழுங்காதே யுண்மை
அறிவித்த இடங்குருவாம் அருளிலதொன் றிலையே. 9.