8. ஆனந்தமானரம்
கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
குணமொன்றும் ஒன்றிலேன்பால்
கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
குணங்களெத் தனைகொடியபாழ்ங்
கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
கள்ளமெத் தனையுள்ளசற்
காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
கதிக்கென் றமைத்தஅருளில்
செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
செல்வதெத் தனைமுயற்சி
சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
தேகத்தில் வாஞ்சைமுதலாய்
அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
யானேன் இவைக்கும் ஆளோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 1.
தெருளாகி மருளாகி யுழலுமன மாய்மனஞ்
சேர்ந்துவளர் சித்தாகிஅச்
சித்தெலாஞ் சூழ்ந்தசிவ சித்தாய் விசித்ரமாய்த்
திரமாகி நானாவிதப்
பொருளாகி யப்பொருளை யறிபொறியு மாகிஐம்
புலனுமாய் ஐம்பூதமாய்ப்
புறமுமாய் அகமுமாய்த் தூரஞ் சமீபமாய்ப்
போக்கொடு வரத்துமாகி
இருளாகி யொளியாகி நன்மைதீ மையுமாகி
இன்றாகி நாளையாகி
என்றுமாய் ஒன்றுமாய்ப் பலவுமாய் யாவுமாய்
இவையல்ல வாயநின்னை
அருளாகி நின்றவர்க ளறிவதல் லாலொருவர்
அறிவதற் கெளிதாகுமோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 2.
மாறுபடு தர்க்கந் தொடுக்கஅறி வார்சாண்
வயிற்றின் பொருட்டதாக
மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனதுழல
மாலாகி நிற்கஅறிவார்
வேறுபடு வேடங்கள் கொள்ளஅறி வாரொன்றை
மெணமெணென் றகம்வேறதாம்
வித்தையறி வார்எமைப் போலவே சந்தைபோல்
மெய்ந்நூல் விரிக்கஅறிவார்
சீறுபுலி போற்சீறி மூச்சைப் பிடித்துவிழி
செக்கச் சிவக்கஅறிவார்
திரமென்று தந்தம் மதத்தையே தாமதச்
செய்கைகொடும் உளற அறிவார்
ஆறுசம யங்கடொறும் வேறுவே றாகிவிளை
யாடுமுனை யாவரறிவார்
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 3.
காயிலை யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய
கடும்பசி தனக்கடைத்துங்
கார்வரையின் முழையிற் கருங்கல்போ லசையாது
கண்மூடி நெடிதிருந்தும்
தீயினிடை வைகியுந் தோயமதில் மூழ்கியுந்
தேகங்கள் என்பெலும்பாய்த்
தெரியநின் றுஞ்சென்னி மயிர்கள்கூ டாக்குருவி
தெற்றவெயி லூடிருந்தும்
வாயுவை யடக்கியு மனதினை யடக்கியு
மௌனத்தி லேயிருந்தும்
மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுதுண்டு
வனமூடி ருந்தும் அறிஞர்
ஆயுமறை முடிவான அருள்நாடி னாரடிமை
அகிலத்தை நாடல்முறையோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 4.
சுத்தமும் அசுத்தமும் துக்கசுக பேதமுந்
தொந்தமுடன் நிர்த்தொந்தமும்
ஸ்தூலமொடு சூட்சமமும் ஆசையும் நிராசையுஞ்
சொல்லுமொரு சொல்லின் முடிவும்
பெத்தமொடு முத்தியும் பாவமொ டபாவமும்
பேதமொ டபேதநிலையும்
பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும்
பெண்ணினுடன் ஆணும்மற்றும்
நித்தமும் அநித்தமும் அஞ்சனநி ரஞ்சனமும்
நிட்களமும் நிகழ்சகளமும்
நீதியும் அநீதியும் ஆதியோ டநாதியும்
நிர்விடய விடயவடிவும்
அத்தனையும் நீயலதெள் அத்தனையும் இல்லையெனில்
யாங்களுனை யன்றியுண்டோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 5.
காராரும் ஆணவக் காட்டைக் களைந்தறக்
கண்டகங் காரமென்னுங்
கல்லைப் பிளந்துநெஞ் சகமான பூமிவெளி
காணத் திருத்திமேன்மேல்
பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
பதித்தன்பு நீராகவே
பாய்ச்சியது பயிராகு மட்டுமா மாயைவன்
பறவையணு காதவண்ணம்
நேராக நின்றுவிளை போகம் புசித்துய்ந்த
நின்னன்பர் கூட்டமெய்த
நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
நின்னருட் பாரமென்றும்
ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி
யாகின்ற துரியமயமே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 6.
வானாதி பூதமாய் அகிலாண்ட கோடியாய்
மலையாகி வளைகடலுமாய்
மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி
வான்கருணை வெள்ளமாகி
நானாகி நின்றவனு நீயாகி நின்றிடவு
நானென்ப தற்றிடாதே
நான்நான் எனக்குளறி நானா விகாரியாய்
நானறிந் தறியாமையாய்ப்
போனால் அதிட்டவலி வெல்லஎளி தோபகல்
பொழுதுபுகு முன்கண்மூடிப்
பொய்த்துகில்கொள் வான்தனை எழுப்பவச மோஇனிப்
போதிப்ப தெந்தநெறியை
ஆனாலும் என்கொடுமை அநியாயம் அநியாயம்
ஆர்பால் எடுத்துமொழிவேன்
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 7.
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள்
புலப்பட அறிந்துநிலையாப்
புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல்
பொருளலாப் பொருளைநாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
வினையினேன் என்றென்னைநீ
விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
வேறுகதி யேதுபுகலாய்
துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
துணைவனே யிணையொன்றிலாத்
துரியனே துரியமுங் காணா அதீதனே
சுருதிமுடி மீதிருந்த
ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட்
டகலாத கருணைவடிவே
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 8.
எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என்
இதயமும் ஒடுங்கவில்லை
யானெனும் அகந்தைதான் எள்ளளவு மாறவிலை
யாதினும் அபிமானம்என்
சித்தமிசை குடிகொண்ட தீகையொ டிரக்கமென்
சென்மத்து நானறிகிலேன்
சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினுந்
தெரிசனங் கண்டும்அறியேன்
பொய்த்தமொழி யல்லால் மருந்துக்கும் மெய்ம்மொழி
புகன்றிடேன் பிறர்கேட்கவே
போதிப்ப தல்லாது சும்மா இருந்தருள்
பொருந்திடாப் பேதைநானே
அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா
அவனிமிசை யுண்டோசொலாய்
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 9.
எக்கால முந்தனக் கென்னவொரு செயலிலா
ஏழைநீ என்றிருந்திட்
டெனதாவி யுடல்பொருளும் மௌனியாய் வந்துகை
ஏற்றுநம தென்றஅன்றே
பொய்க்கால தேசமும் பொய்ப்பொருளில் வாஞ்சையும்
பொய்யுடலை மெய்யென்னலும்
பொய்யுறவு பற்றலும் பொய்யாகு நானென்னல்
பொய்யினும் பொய்யாகையால்
மைக்கா லிருட்டனைய இருளில்லை இருவினைகள்
வந்தேற வழியுமில்லை
மனமில்லை யம்மனத் தினமில்லை வேறுமொரு
வரவில்லை போக்குமில்லை
அக்காலம் இக்கால மென்பதிலை எல்லாம்
அதீதமய மானதன்றோ
அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. 10.