Thayumanavar Songs – கருணாகரக்கடவுள்

6. கருணாகரக்கடவுள்

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
நிர்விடய கைவல்யமா
நிட்கள அசங்கசஞ் சலரகித நிர்வசன
நிர்த்தொந்த நித்தமுக்த
தற்பரவித் வாதீத வ்யோமபரி பூரண
சதானந்த ஞானபகவ
சம்புசிவ சங்கர சர்வேச என்றுநான்
சர்வகா லமும்நினைவனோ
அற்புத அகோசர நிவிர்த்திபெறும் அன்பருக்
கானந்த பூர்த்தியான
அத்துவித நிச்சய சொரூபசாட் சாத்கார
அநுபூதி யநுசூதமுங்
கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற்
கண்ணூ டிருந்தகுருவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 1.

மண்ணாதி ஐந்தொடு புறத்திலுள கருவியும்
வாக்காதி சுரோத்ராதியும்
வளர்கின்ற சப்தாதி மனமாதி கலையாதி
மன்னுசுத் தாதியுடனே
தொண்ணூற்றொ டாறுமற் றுள்ளனவும் மௌனியாய்ச்
சொன்னவொரு சொற்கொண்டதே
தூவெளிய தாயகண் டானந்த சுகவாரி
தோற்றுமதை என்சொல்லுவேன்
பண்ணாரும் இசையினொடு பாடிப் படித்தருட்
பான்மைநெறி நின்றுதவறாப்
பக்குவ விசேடராய் நெக்குநெக் குருகிப்
பணிந்தெழுந் திருகைகூப்பிக்
கண்ணாறு கரைபுரள நின்றஅன் பரையெலாங்
கைவிடாக் காட்சியுறவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 2.

எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
எல்லாமுன் னுடையசெயலே
எங்கணும் வியாபிநீ என்றுசொலு மியல்பென்
றிருக்காதி வேதமெல்லாஞ்
சொல்லான் முழக்கியது மிக்கவுப காரமாச்
சொல்லிறந் தவரும்விண்டு
சொன்னவையு மிவைநல்ல குருவான பேருந்
தொகுத்தநெறி தானுமிவையே
அல்லாம லில்லையென நன்றா அறிந்தேன்
அறிந்தபடி நின்றுசுகநான்
ஆகாத வண்ணமே இவ்வண்ண மாயினேன்
அதுவுநின தருளென்னவே
கல்லாத அறிஞனுக் குள்ளே யுணர்த்தினை
கதிக்குவகை யேதுபுகலாய்
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 3.

பட்டப் பகற்பொழுதை இருளென்ற மருளர்தம்
பட்சமோ எனதுபட்சம்
பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது
பரமவெளி யாகவொருசொல்
திட்டமுடன் மௌனியா யருள்செய் திருக்கவுஞ்
சேராமல் ஆராகநான்
சிறுவீடு கட்டியதின் அடுசோற்றை யுண்டுண்டு
தேக்குசிறி யார்கள்போல
நட்டனைய தாக்கற்ற கல்வியும் விவேகமும்
நன்னிலய மாகவுன்னி
நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே
நடுவே முளைத்தமனதைக்
கட்டஅறி யாமலே வாடினே னெப்போது
கருணைக் குரித்தாவனோ
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 4.

மெய்விடா நாவுள்ள மெய்யரு ளிருந்துநீ
மெய்யான மெய்யைஎல்லாம்
மெய்யென வுணர்த்தியது மெய்யிதற் கையமிலை
மெய்யேதும் அறியாவெறும்
பொய்விடாப் பொய்யினேன் உள்ளத் திருந்துதான்
பொய்யான பொய்யைஎல்லாம்
பொய்யெனா வண்ணமே புகலமைத் தாயெனில்
புன்மையேன் என்செய்குவேன்
மைவிடா செழுநீல கண்டகுரு வேவிட்ணு
வடிவான ஞானகுருவே
மலர்மேவி மறையோது நான்முகக் குருவே
மதங்கள்தொறும் நின்றகுருவே
கைவிடா தேயென்ற அன்பருக் கன்பாய்க்
கருத்தூ டுணர்த்துகுருவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 5.

பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்திஅப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் னுளம்நிற்றிநீ
நான்கும்பி டும்டோ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ
விண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேஅ வித்தின் முளையே
கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 6.

சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது
தான்வந்து முற்றுமெனலால்
சகமீ திருந்தாலும் மரணமுண் டென்பது
சதாநிட்டர் நினைவதில்லை
சிந்தையறி யார்க்கீது டோதிப்ப தல்லவே
செப்பினும் வெகுதர்க்கமாம்
திவ்யகுண மார்க்கண்டர் சுகராதி முனிவோர்கள்
சித்தாந்த நித்யரலரோ
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர்
இருக்காதி வேதமுனிவர்
எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள்
இ¢ரவிமதி யாதியோர்கள்
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவருங்
கைகுவித் திடுதெய்வமே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 7.

துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம
துட்டதே வதைகளில்லை
துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே
தொழும்பன்அன் பபிடேகநீர்
உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன்
ஓங்குமதி தூபதீபம்
ஒருசால மன்றிது சதாகால பூசையா
ஒப்புவித் தேன்கருணைகூர்
தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே
தெளிந்ததே னேசீனியே
திவ்யரச மியாவுந் திரண்டொழுகு பாகே
தெவிட்டாத ஆனந்தமே
கள்ளன் அறி வூடுமே மெள்ளமெள வெளியாய்க்
கலக்கவரு நல்லஉறவே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 8.

உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள்
ஊற்றென வெதும்பியூற்ற
ஊசிகாந் தத்தினைக் கண்டணுகல் போலவே
ஓருறவும் உன்னியுன்னிப்
படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்
பாடியா டிக்குதித்துப்
பனிமதி முகத்திலே நிலவனைய புன்னகை
பரப்பியார்த் தார்த்தெழுந்து
மடலவிழு மலரனைய கைவிரித் துக்கூப்பி
வானேயவ் வானிலின்ப
மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி
வாழியென வாழ்த்தியேத்துங்
கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை
கன்னெஞ்ச னுக்கெளியையோ
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 9.

இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர்
எக்காலமும் உதவுவார்
இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார்
இரங்குவார் கொலைகள்பயிலார்
சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை
சாட்சிநீ யிகபரத்துஞ்
சந்தான கற்பகத் தேவா யிருந்தே
சமத்தஇன் பமும்உதவுவாய்
சிங்கத்தை யொத்தென்னைப் பாயவரு வினையினைச்
சேதிக்க வருசிம்புளே
சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே
தீனனேன் கரையேறவே
கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட்
ககனவட் டக்கப்பலே
கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணா கரக்கடவுளே. 10.