11. சச்சிதானந்தசிவம்
பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று
படர்வெளிய தாகிஎழுநாப்
பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட
பகிரண்ட உயிரெவைக்கும்
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய்
நித்தமாய் நிர்த்தொந்தமாய்
நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத
நிர்மலா னந்தமயமாய்ப்
பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான்
பேரின்ப மெய்திடாமல்
பேய்மனதை ய்ண்டியே தாயிலாப் பிள்ளைபோல்
பித்தாக வோமனதைநான்
சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ்
சாசுவத நிட்டைஅருளாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.1.
குடக்கொடு குணக்காதி திக்கினை யுழக்கூடு
கொள்ளல்போல் ஐந்துபூதங்
கூடஞ் சுருங்கிலைச் சாலேகம் ஒன்பது
குலாவுநடை மனையைநாறும்
வடக்கயிறு வெள்நரம் பாஎன்பு தசையினால்
மதவேள் விழாநடத்த
வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர்செந் நீர்கணீர்
மலநீர்புண் நீரிறைக்கும்
விடக்குத் துருத்தியைக் கருமருந்துக் கூட்டை
வெட்டவெட் டத்தளிர்க்கும்
வேட்கைமரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே
மெய்போ லிருந்துபொய்யாஞ்
சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயந்
தானாகி நிற்பதென்றோ
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.2.
பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
பத்திநெறி யில்லைவேத
பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
பகரவோ இசையுமில்லை
யோகத்தி லேசிறிது முயலவென் றால்தேகம்
ஒவ்வாதி வூண்வெறுத்தால்
உயிர்வெறுத் திடலொக்கும் அல்லாது கிரியைகள்
உபாயத்தி னாற்செய்யவோ
மோகத்தி லேசிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான
மோனத்தில் நிற்கஎன்றால்
முற்றாது பரிபாக சத்திக ளனேகநின்
மூதறிவி லேஎழுந்த
தாகத்தி லேவாய்க்கும் அமிர்தப் பிரவாகமே
தன்னந் தனிப்பெருமையே
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.3.
இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும்
இவ்வுலகம் எவ்வுலகமோ
என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ
என்னில்மக மேருவாக்கிச்
சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச்
சுமையாளு மாக்கிநாளுந்
துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ்
சூறையிட் டிந்த்ரசாலம்
அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை
அம்மம்ம வெல்லலெளிதோ
அருள்பெற்ற பேர்க்கெலாம் ஒளிபெற்று நிற்குமீ
தருளோ அலாதுமருளோ
சமயநெறி காணாத சாட்சிநீ சூட்சுமமாத்
தமியனேற் குளவு புகலாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.4.
இனியே தெமக்குனருள் வருமோ வெனக்கருதி
ஏங்குதே நெஞ்சம்ஐயோ
இன்றைக் கிருந்தாரை நாளைக்கி ருப்பரென்
றெண்ணவோ திடமில்லையே
அனியாய மாயிந்த வுடலைநான் என்றுவரும்
அந்தகற் காளாகவோ
ஆடித் திரிந்துநான் கற்றதுங் கேட்டதும்
அவலமாய்ப் போதல்நன்றோ
கனியேனும் வறியசெங் காயேனும் உதிர்சருகு
கந்தமூ லங்களேனும்
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப் புசித்துநான்
கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற் கெண்ணினேன் எண்ணமிது
சாமிநீ அறியாததோ
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.5.
மத்தமத கரிமுகிற் குலமென்ன நின்றிலகு
வாயிலுடன் மதிஅகடுதோய்
மாடகூ டச்சிகர மொய்த்தசந் திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்தநகை யார்களடு
முத்துமுத் தாய்க்குலாவி
மோகத் திருந்துமென் யோகத்தின் நிலைநின்று
மூச்சைப் பிடித்தடைத்துக்
கைத்தல நகப்படை விரித்தபுலி சிங்கமொடு
கரடிநுழை நூழைகொண்ட
கானமலை யுச்சியிற் குகையூ டிருந்துமென்
கரதலா மலகமென்னச்
சத்தமற மோனநிலை பெற்றவர்க ளுய்வர்காண்
சனகாதி துணிவிதன்றோ
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.6.
கைத்தலம் விளங்குமொரு நெல்லியங் கனியெனக்
கண்டவே தாகமத்தின்
காட்சிபுரு டார்த்தமதில் மாட்சிபெறு முத்தியது
கருதின் அனு மானமாதி
உத்திபல வாநிரு விகற்பமே லில்லையால்
ஒன்றோ டிரண்டென்னவோ
உரையுமிலை நீயுமிலை நானுமிலை என்பதும்
உபாயம்நீ யுண்டுநானுஞ்
சித்தம்உளன் நான்இல்லை எனும்வசனம் நீயறிவை
தெரியார்கள் தெரியவசமோ
செப்புகே வலநீதி யொப்புவமை யல்லவே
சின்முத்தி ராங்கமரபில்
சத்தமற எனையாண்ட குருமௌனி கையினால்
தமியனேற் குதவுபொருளே
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.7.
காயாத மரமீது கல்லேறு செல்லுமோ
கடவுள்நீ யாங்களடியேங்
கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பெறக்
கற்பித்த துன்னதருளே
வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர்
வைவதுவும் எங்களுலக
வாய்பாடு நிற்கநின் வைதிக ஒழுங்குநினை
வாழ்த்தினாற் பெறுபேறுதான்
ஓயாது பெறுவரென முறையிட்ட தாற்பின்னர்
உளறுவது கருமமன்றாம்
உபயநெறி யீதென்னின் உசிதநெறி எந்தநெறி
உலகிலே பிழைபொருக்குந்
தாயான கருணையும் உனக்குண் டெனக்கினிச்
சஞ்சலங் கெடஅருள்செய்வாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.8.
இன்னம் பிறப்பதற் கிடமென்னில் இவ்வுடலம்
இறவா திருப்பமூலத்
தெழுமங்கி யமிர்தொழுகு மதிமண் டலத்திலுற
என்னம்மை குண்டலினிபால்
பின்னம் பிறக்காது சேயென வளர்த்திடப்
பேயேனை நல்கவேண்டும்
பிறவாத நெறியெனக் குண்டென்னின் இம்மையே
பேசுகர்ப் பூரதீபம்
மின்னும் படிக்ககண் டாகார அன்னைபால்
வினையேனை யொப்புவித்து
வீட்டுநெறி கூட்டிடுதல் மிகவுநன் றிவையன்றி
விவகார முண்டென்னிலோ
தன்னந் தனிச்சிறியன் ஆற்றிலேன் போற்றிவளர்
சன்மார்க்க முத்திமுதலே
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.9.
வேதாவை இவ்வணம் விதித்ததே தென்னின்உன்
வினைப்பகுதி என்பன்அந்த
வினைபேச அறியாது நிற்கஇவை மனதால்
விளைந்ததால் மனதைநாடில்
போதமே நிற்கும்அப் போதத்தை நாடிலோ
போதமும் நினால்விளக்கம்
பொய்யன்று தெய்வமறை யாவுமே நீயென்று
போக்குவர வறநிகழ்த்தும்
ஆதார ஆதேயம் முழுதுநீ யாதலால்
அகிலமீ தென்னைஆட்டி
ஆடல்கண் டவனுநீ ஆடுகின் றவனுநீ
அருளுநீ மௌனஞான
தாதாவு நீபெற்ற தாய்தந்தை தாமுநீ
தமருநீ யாவுநீகாண்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.10.
கொந்தவிழ் மலர்ச்சோலை நன்னீழல் வைகினுங்
குளிர்தீம் புனற்கைஅள்ளிக்
கொள்ளுகினும் அந்நீ ரிடைத்திளைத் தாடினுங்
குளிர்சந்த வாடைமடவார்
வந்துலவு கின்றதென மூன்றிலிடை யுலவவே
வசதிபெறு போதும்வெள்ளை
வட்டமதி பட்டப் பகற்போல நிலவுதர
மகிழ்போதும் வேலையமுதம்
விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும்
வேளையிலும் மாலைகந்தம்
வெள்ளிலை அடைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்
விளையாடி விழிதுயிலினுஞ்
சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து
தமியேனை ரட்சைபுரிவாய்
சர்வபரி பூரண அகண்டதத் துவமான
சச்சிதா னந்தசிவமே.11.