9. சுகவாரி
இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
எனருசித் திடவலியவந்
தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர்
இடையறா துருகிநாடி
உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும்
ஓய்ந்துயர்ந் தவசமாகி
உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே
உணர்வார்கள் உள்ளபடிகாண்
கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங்
கைக்கொள்வள் பக்குவத்தில்
கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக்
கருதிநகை யாவளதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
தோற்றிற் சுகாரம்பமாஞ்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 1.
அன்பின்வழி யறியாத என்னைத் தொடர்ந்தென்னை
அறியாத ப்க்குவத்தே
ஆசைப் பெருக்கைப் பெருக்கிக் கொடுத்துநான்
அற்றேன் அலந்தேன்என
என்புலன் மயங்கவே பித்தேற்றி விட்டாய்
இரங்கியொரு வழியாயினும்
இன்பவெள மாகவந் துள்ளங் களிக்கவே
எனைநீ கலந்ததுண்டோ
தன்பருவ மலருக்கு மணமுண்டு வண்டுண்டு
தண்முகை தனக்குமுண்டோ
தமியனேற் கிவ்வணந் திருவுள மிரங்காத
தன்மையால் தனியிருந்து
துன்பமுறி னெங்ஙனே யழியாத நின்னன்பர்
சுகம்வந்து வாய்க்கும்உரையாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 2.
கல்லேனும் ஐயவொரு காலத்தில் உருகுமென்
கல்நெஞ்சம் உருகவிலையே
கருணைக் கிணங்காத வன்மையையும் நான்முகன்
கற்பிக்க வொருகடவுளோ
வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு
வழக்குக் கிழுக்குமுண்டோ
வானமாய் நின்றின்ப மழையா யிறங்கிஎனை
வாழ்விப்ப துன்பரங்காண்
பொல்லாத சேயெனில் தாய்தள்ளல் நீதமோ
புகலிடம் பிறிதுமுண்டோ
பொய்வார்த்தை சொல்லிலோ திருவருட் கயலுமாய்ப்
புன்மையே னாவனந்தோ
சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மௌனியாய்ச்
சும்மா இருக்கஅருளாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 3.
என்பெலாம் நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்பஉடல்
இளகமன தழலின்மெழுகாய்
இடையறா துருகவரு மழைபோ லிரங்கியே
இருவிழிகள் நீரிறைப்ப
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙனே
அமிர்தசஞ் சீவிபோல்வந்
தானந்த மழைபொழிவை உள்ளின்பி லாதஎனை
யார்க்காக அடிமைகொண்டாய்
புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு
புலைக்குடிலில் அருவருப்புப்
பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன்
புந்திசெலு மோபாழிலே
துன்பமா யலையவோ உலகநடை ஐயவொரு
சொற்பனத் திலும்வேண்டிலேன்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 4.
வெந்நீர் பொறாதென்உடல் காலில்முள் தைக்கவும்
வெடுக்கென் றசைத்தெடுத்தால்
விழிஇமைத் தங்ஙனே தண்ணருளை நாடுவேன்
வேறொன்றை யொருவர்கொல்லின்
அந்நேரம் ஐயோஎன் முகம்வாடி நிற்பதுவும்
ஐயநின் னருள் அறியுமே
ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்என்னை
ஆண்டநீ கைவிடாதே
இந்நேர மென்றிலை உடற்சுமைய தாகவும்
எடுத்தா லிறக்கஎன்றே
எங்கெங்கு மொருதீர்வை யாயமுண் டாயினும்
இறைஞ்சுசுக ராதியான
தொன்னீர்மை யாளர்க்கு மானுடன் வகுத்தஅருள்
துணையென்று நம்புகின்றேன்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 5.
பற்றுவன அற்றிடு நிராசையென் றொருபூமி
பற்றிப் பிடிக்கும்யோகப்
பாங்கிற் பிராணலயம் என்னுமொரு பூமிஇவை
பற்றின்மன மறும்என்னவே
கற்றையஞ் சடைமௌனி தானே கனிந்தகனி
கனிவிக்க வந்தகனிபோல்
கண்டதிந் நெறியெனத் திருவுளக் கனிவினொடு
கனிவாய் திறந்தும் ஒன்றைப்
பெற்றவனு மல்லேன் பெறாதவனு மல்லேன்
பெருக்கத் தவித்துளறியே
பெண்ணீர்மை என்னஇரு கண்ணீ ரிறைத்துநான்
பேய்போ லிருக்கஉலகஞ்
சுற்றிநகை செய்யவே யுலையவிட் டாயெனில்
சொல்லஇனி வாயுமுண்டோ
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 6.
அரும்பொனே மணியேஎன் அன்பேஎன் அன்பான
அறிவேஎன் அறிவிலூறும்
ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
ஆடினேன் நாடிநாடி
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன்
மெய்சிலிர்த் திருகைகூப்பி
விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே
வேசற றயர்ந்தேனியான்
இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை
இடைவிட்டு நின்றதுண்டோ
என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ
யாதேனும் அறியாவெறுந்
துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டுகண்டாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 7.
பாராதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற
பரவெளியி நுண்மைகாட்டிப்
பற்றுமன வெளிகாட்டி மனவெளியி னில்தோய்ந்த
பாவியேன் பரிசுகாட்டித்
தாராள மாய்நிற்க நிர்ச்சந்தை காட்டிச்
சதாகால நிட்டைஎனவே
சகநிலை காட்டினை சுகாதீத நிலயந்
தனைக்காட்ட நாள்செல்லுமோ
காரார எண்ணரும் அனந்தகோ டிகள்நின்று
காலூன்றி மழைபொழிதல்போல்
கால்வீசி மின்னிப் படர்ந்துபர வெளியெலாங்
கம்மியா னந்தவெள்ளஞ்
சோராது பொழியவே கருணையின் முழங்கியே
தொண்டரைக் கூவுமுகிலே
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 8.
பேதித்த சமயமோ ஒன்றுசொன படியொன்று
பேசாது துறவாகியே
பேசாத பெரியோர்கள் நிருவிகற் பத்தினால்
பேசார்கள் பரமகுருவாய்ப்
போதிக்கும் முக்கண்இறை நேர்மையாய்க் கைக்கொண்டு
போதிப்ப தாச்சறிவிலே
போக்குவர வறஇன்ப நீக்கமற வசனமாப்
போதிப்ப தெவரையனே
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமதென்று
சங்கிப்ப ராதலாலே
தன்னிலே தானா யயர்ந்துவிடு வோமெனத்
தனியிருந் திடினங்ஙனே
சோதிக்க மனமாயை தனைஏவி னாலடிமை
சுகமாவ தெப்படிசொலாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 9.
அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ
அலரிமண் டலநடுவிலோ
அனல்நடுவி லோஅமிர்த மதநடுவி லோஅன்பர்
அகமுருகி மலர்கள்தூவித்
தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத்
திகந்தத்தி லோவெளியிலோ
திகழ்விந்து நாசநிலை தன்னிலோ வேதாந்த
சித்தாந்த நிலைதன்னிலோ
கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக்
கண்டசூ னியமதனிலோ
காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ
கருவிகர ணங்களோய்ந்த
தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது
தொழும்பனேற் குளவுபுகலாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 10.
எந்தநாள் கருணைக் குரித்தாகு நாளெனவும்
என்னிதயம் எனைவாட்டுதே
ஏதென்று சொல்லுவேன் முன்னொடுபின் மலைவறவும்
இற்றைவரை யாதுபெற்றேன்
பந்தமா னதிலிட்ட மெழுகாகி உள்ளம்
பதைத்துப் பதைத்துருகவோ
பரமசுக மானது பொருப்பரிய துயரமாய்ப்
பலகாலு மூர்ச்சிப்பதோ
சிந்தையா னதுமறிவை என்னறிவி லறிவான
தெய்வம்நீ யன்றியுளதோ
தேகநிலை யல்லவே உடைகப்பல் கப்பலாய்த்
திரையாழி யூடுசெலுமோ
சொந்தமா யாண்டநீ அறியார்கள் போலவே
துன்பத்தி லாழ்த்தல்முறையோ
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 11.
எந்நாளும் உடலிலே உயிராம் உனைப்போல்
இருக்கவிலை யோமனதெனும்
யானுமென் நட்பாம் பிராணனும் எமைச்சடம
தென்றுனைச் சித்தென்றுமே
அந்நாளி லெவனோ பிரித்தான் அதைக்கேட்ட
அன்றுமுதல் இன்றுவரையும்
அநியாய மாயெமை யடக்கிக் குறுக்கே
அடர்ந்தரசு பண்ணிஎங்கள்
முன்னாக நீஎன்ன கோட்டைகொண் டாயென்று
மூடமன மிகவும்ஏச
மூண்டெரியும் அனலிட்ட மெழுகா யுளங்கருகல்
முறைமையோ பதினாயிரஞ்
சொன்னாலும் நின்னரு ளிரங்கவிலை யேஇனிச்
சுகம்வருவ தெப்படிசொலாய்
சுத்தநீர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 12.