Thayumanavar Songs – சொல்லற்குஅரிய

20. சொல்லற்குஅரிய

சொல்லற் கரிய பரம்பொருளே
சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே
வெல்லற் கரிய மயலிலெனை
விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன்
கல்லிற் பசிய நாருரித்துக்
கடுகிற் பெரிய கடலடைக்கும்
அல்லிற் கரிய அந்தகனார்க்
காளாக் கினையோ அறியேனே. 1.

அறிவிற் கறிவு தாரகமென்
றறிந்தே, அறிவோ டறியாமை
நெறியிற் புகுதா தோர்படித்தாய்
நின்ற நிலையுந் தெரியாது
குறியற் றகண்டா தீதமயக்
கோதி லமுதே நினைக்குறுகிப்
பிரிவற் றிறுக்க வேண்டாவோ
பேயேற் கினிநீ பேசாயே. 2.

பேசா அநுபூ தியை அடியேன்
பெற்றுப் பிழைக்கப் பேரருளால்
தேசோ மயந்துந் தினியொருகாற்
சித்தத் திருளுந் தீர்ப்பாயோ
பாசா டவியைக் கடந்தஅன்பர்
பற்றும் அகண்டப் பரப்பான
ஈசா பொதுவில் நடமாடும்
இறைவா குறையா இன்னமுதே. 3.

இன்பக் கடலில் புகுந்திடுவான்
இரவும் பகலுந் தோற்றாமல்
அன்பிற் கரைந்து கரைந்துருகி
அண்ணா அரசே எனக்கூவிப்
பின்புற் றழுஞ்சே யெனவிழிநீர்
பெருக்கிப் பெருக்கிப் பித்தாகித்
துன்பக் கடல்விட் டகல்வேனோ
சொரூபா னந்தச் சுடர்க்கொழுந்தே. 4.

கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்
கோவே மன்றிற் கூத்தாடற்
கெழுந்த சுடரே இமயவரை
என்தாய் கண்ணுக் கினியானே
தொழும்தெய் வமும்நீ குருவும்நீ
துணைநீ தந்தை தாயும்நீ
அழுந்தும் பவம்நீ நன்மையும்நீ
ஆவி யாக்கை நீதானே. 5.

தானே யகண்டா காரமயந்
தன்னி லெழுந்து பொதுநடஞ்செய்
வானே மாயப் பிறப்பறுப்பான்
வந்துன் அடிக்கே கரங்கூப்பித்
தேனே என்னைப் பருகவல்ல
தெள்ளா ரமுதே சிவலோகக்
கோனே எனுஞ்சொல் நினதுசெவி
கொள்ளா தென்னோ கூறாயே. 6.

கூறாநின்ற இடர்க்கவலைக்
குடும்பக் கூத்துள் துளைந்துதடு
மாறா நின்ற பாவியைநீ
வாவென் றழைத்தால் ஆகாதோ
நீறார் மேனி முக்கணுடை
நிமலா அடியார் நினைவினிடை
ஆறாய்ப் பெருகும் பெருங்கருணை
அரசே என்னை ஆள்வானே. 7.

வானே முதலாம் பெரும்பூதம்
வகுத்துப் புரந்து மாற்றவல்ல
கோனே என்னைப் புரக்கும்நெறி
குறித்தா யிலையே கொடியேனைத்
தானே படைத்திங் கென்னபலன்
தன்னைப் படைத்தா யுன்கருத்தை
நானே தென்றிங் கறியேனே
நம்பி னேன்கண் டருள்வாயே. 8.

கண்டார் கண்ட காட்சியும்நீ
காணார் காணாக் கள்வனும்நீ
பண்டா ருயிர்நீ யாக்கையுநீ
பலவாஞ் சமயப் பகுதியும்நீ
எண்தோள் முக்கட் செம்மேனி
எந்தாய் நினக்கே எவ்வாறு
தொண்டாய்ப் பணிவா ரவர்பணிநீ
சூட்டிக் கொள்வ தெவ்வாறே. 9.

சூட்டி எனதென் றிடுஞ்சுமையைச்
சுமத்தி எனையுஞ் சுமையாளாக்
கூட்டிப் பிடித்து வினைவழியே
கூத்தாட் டினையே நினதருளால்
வீட்டைக் கருதும் அப்போது
வெளியாம் உலக வியப்பனைத்தும்
ஏட்டுக் கடங்காச் சொப்பனம்போல்
எந்தாய் இருந்த தென்சொல்வேன். 10.