Thayumanavar Songs – பரிபூரணானந்தம்

2. பரிபூரணானந்தம்

வாசா கயிங்கரிய மன்றியொரு சாதன
மனோவாயு நிற்கும்வண்ணம்
வாலாய மாகவும் பழகியறி யேன்துறவு
மார்கத்தின் இச்சைபோல
நேசானு சாரியாய் விவகரிப் பேன் அந்த
நினைவையும் மறந்தபோது
நித்திரைகொள் வேந்தேகம் நீங்குமென எண்ணிலோ
நெஞ்சந் துடித்தயகுவேன்
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதூரமே
பேய்க்குண மறிந்திந்த நாய்க்குமொரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்
பாசா டவிக்குளே செல்லாதவர்க்கருள்
பழுத்தொழுகு தேவதருவே
பார்குமண்ட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 1.

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன
செயற்கொண் டிருப்பனமுதல்
தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பௌதிகஞ்
சென்மித்த ஆங்கிறக்கும்
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும்
மேற்கொண்ட சேடம் அதுவே
வெறுவெளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த
வேதவே தாந்தஞானம்
பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள் அருட்
பெற்றோர்கள் பெற்றபெருமை
பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து
பேசாமை யாகுமெனவே
பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே
பரிபாக காலமலவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 2.

ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐயவொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராமென இருந்தபேரும்
நேராக வொருகோபம் ஒருவேளை வரஅந்த
நிறைவொன்று மில்லாமலே
நெட்டுயிர்த் துத்தட் டழிந்துளறு வார்வசன
நிர்வாக ரென்றபேரும்
பூராய மாயோன்று பேசுமிட மோன்றைப்
புலம்புவார் சிவராத்திரிப்
போதுதுயி லோமெனற விரதியரும் அறிதுயில்
போலேயிருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில்நின் செயலல்லவோ
பார்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 3.

அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே
அம்மாயை யில்லாமையே
யாமெனெவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற
அறிவினனை யறிந்துபார்க்கின்
எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல்
இல்லையெனு நினைவுஉண்டிங்(கு)
யானென தறந்துரிய நிறைவாகி நிற்பதே
இன்பமெனும் அன்பும்உண்டு
கண்டன எலாம்அல்ல என்றுகண் டனைசெய்து
கருவிகர ணங்களோயக்
கண்மூடி யொருகண மிருக்கஎன் றாற்பாழ்த்த
கர்மங்கள் போராடுதே
பண்டையுள கர்மமே கர்த்தா வெனும்பெயர்ப்
பக்ஷ்ம்நான் இச்சிப்பனோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 4.

சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந்
தன்மைநினை யன்றியில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த
சமரச சுபாவமிதுவே
இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய
இயற்கைதிரு வுளமறியுமே
இன்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை
இதசத்ரு வாகவந்து
சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந்
திரும்புமோ தொடுவழக்காய்ச்
சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
சிரத்தைஎனும் வாளும்உதவிப்
பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப்
பாதுகாத் தருள்செய்குவாய்
பார்க்குமிட மெங்குமொருநீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 5.

பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர்
பொறிபுலன் அடங்குமிடமே
பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம்
போனஇட மென்பர்சிலபேர்
நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர்
நட்டநடு வேயிருந்த
நாமென்பர் சிலர்ருவுஉருவ மாமென்பர் சிலர்கருதி
நாடில்அரு வென்பர்சிலபேர்
பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர்
பேசில்அரு ளென்பர்சிலபேர்
பின்னும்முன் னுங்கெட்டசூனியம தென்பர்சிலர்
பிறவுமே மொழிவர்இவையால்
பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்
பரமசுக நிட்டை பெறுமோ
பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.6 .

அந்தகா ரத்தையோர் அகமாக்கி மின்போல்என்
அறிவைச் சுருக்கினவரார்
அவ்வறிவு தானுமே பற்றினது பற்றாய்
அழுந்தவுந் தலைமீதிலே
சொந்தமா யெழுதப் படித்தார் மெய்ஞ்ஞான
சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் உண்டுண்டு
தூங்கவைத் தவரார்கொலொ
தந்தைதாய் முதலான அகிலப்ர பஞ்சந்
தனைத்தந்த தெனதாசையோ
தன்னையே நோவனொ பிறரையே நோவனோ
தற்கால மதைநோவனோ
பந்தமா னதுதந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.7 .

வாரா தெலாமொழிய வருவன வெலாமெய்த
மனதுசாட் சியதாகவே
மருவநிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த
மரபுசம ரசமாகவே
பூராய மாயுணர வூகமது தந்ததும்
பொய்யுடலை நிலையன்றெனப்
போதநெறி தந்த்துஞ் சாசுவத ஆனந்த
போகமே வீடென்னவே
நீராள மாயுருக வுள்ளன்பு தந்ததும்
நின்னதருள் இன்னும் இன்னும்
நின்னையே துணையென்ற என்னையே காக்கவொரு
நினைவுசற் றுண்டாகிலோ
பாராதி யறியாத மோனமே யிடைவிடாப்
பற்றாக நிற்கஅருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற ந்றைகின்ற
ப்ரிபூர ணானந்தமே.8 .

ஆழாழி கரையின்றி நிற்கவிலை யோகொடிய
ஆலம்அமு தாகவிலையோ
அக்கடலின் மீதுவட அனல்நிற்க வில்லையோ
அந்தரத் தகி¢லகோடி
தாழாமல் நிலைநிற்க வில்யோ மேருவுந்
தனுவாக வளையவிலயோ
சத்தமே கங்களும் வச்ரதர னாணையில்
சஞ்சரித் திடவில்லையோ
வாழாது வாழவே இராமனடி யாற்சிலையும்
மடமங்கை யாகவிலையோ
மணிமந்த்ர மாதியால் வேண்டுசித் திகள்உலக
மார்கத்தில் வைக்கவிலையோ
பாழான என்மனங் குவியஒரு தந்திரம்
பண்ணுவ துனக்கருமையோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமறநிறைகின்ற
பரிபூர ணானந்தமே. 9 .

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.10 .