Thayumanavar Songs – பொருள் வணக்கம்

3. பொருள் வணக்கம்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
சிந்தை செய்வாம்.1 .

யாதுமன நினையுமந்த நினைவுக்கு நினைவாகி
யாதநின் பாலும்
பேதமற நின்றுயிக் குராகி அன்பருக்கே
பேரா னந்தக்
கோதிலமு தூற்றரும்பிக் குணங்குறியொன் றறத்தன்னைக்
கொடுத்துக் காட்டுந்
தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
சிந்தை செய்வாம். 2 .

பெருவெளியாய் ஐம்பூதம் பிறப்பிடமாய்ப் பேசாத
பெரிய மோனம்
வருமிடமாய் மனமாதிக் கெட்டாத பேரின்ப
மயமாய் ஞானக்
குருவருளாற் காட்டிடவும் அன்பரைக்கோத் தறவிழுங்கிக்
கொண்டப் பாலுந்
தெரிவரிதாய்க் கலந்தெந்தப் பொருள் அந்தப் பொருளினையாஞ்
சிந்தை செய்வாம் .3.

இகபரமும் உயிர்க்குயிரை யானெனதற் றவர்உறவை
எந்த நாளுஞ்
சுகபரிபூ ரணமான நிராலம்ப கோசரத்தைத்
துரிய வாழ்வை
அகமகிழ வருந்தேனை முக்கனியைக் கற்கண்டை
அமிர்தை நாடி
மொகுமொகென இருவிழிநீர் முந்திறைப்பக் கரமலர்கள்
முகிழ்த்து நிற்பாம். 4.

சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத்
தன்மை நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்
றியக்கஞ் செய்யும்
சோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான
துறிய வாழ்வைத்
தீதில்பர மாம்பொருளைத் திருவருளை நினைவாகச்
சிந்தை செய்வாம். 5 .

இந்திரசா லங்கனவு கானலின்நீ ரெனவுலகம்
எமக்குத் தோன்றச்
சந்ததமுஞ் சிற்பரத்தா லழியாத தற்பரத்தைச்
சார்ந்து வாழ்க
புந்திமகி ழுறநாளுந் தடையறவா னந்தவெள்ளம்
பொலிக என்றே
வந்தருளுங் குருமௌனி மலர்த்தாளை அநுதினமும்
வழுத்தல் செய்வாம். 6

பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப்
போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த
செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ
னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம்
இறைஞ்சி நிற்பாம் .7 .

அருமறையின் சிரப்பொருளாய் விண்ணவர்மா முனிவர்சித்த
ராதி யானோர்
¦திரிவரிய பூரணமாய்க் காரணங்கற் பனைகடந்த
செல்வ மாகிக்
கருதரிய மலரின்மணம் எள்ளிலெண்ணைய் உடலலுயிர்போற்
கலந்தெந் நாளும்
துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத்
தொழுதல் செய்வாம். 8 .

விண்ணாதி பூதமெல்லாந் தன்னகத்தி லடக்கிவெறு
வெளியாய் ஞானக்
கண்ணாரக் கண்டஅன்பர் கண்ணூடே ஆனந்தக்
கடலாய் வேறொன்
றெண்ணாத படிக்கிரங்கித் தானாகச் செய்தருளும்
இறையே உன்றன்
தண்ணாருஞ் சாந்தஅருள் தனைநினைந்து கரமலர்கள்
தலைமேற் கொள்வாம். 9 .

விண்ணிறைந்த வெளியாய்என் மனவெளியிற் கலந்தறிவாம்
வெளியி னூடுந்
தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்த மானபெருந்
தகையே நின்பால்
உண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகி மொழிகுழறி
உவகை யாகிக்
கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னருளைக்
கருத்தில் வைப்பாம். 10 .

வேறு

ஆதியந்தங் காட்டாத முதலா யெம்மை
அடியைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல
நீதிபெறுங் குருவாகி மனவாக் கெட்டா
நிச்சயமாய்ச் சொச்சமதாய் நிமல மாகி
வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி
மௌனத்தோர் பால்வெளியாய் வயங்கா நின்ற
சோதியைஎன் னுயிர்த்துணையை நாடிக் கண்ணீர்
சொரியஇரு கரங்குவித்துத் தொழுதல் செய்வாம். 1 .

அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய்
அமர்ந்தென அகிலாண்டம் அனைத்துமாகிப்
பகர்வனஎல் லாமாகி அல்ல தாகிப்
பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித்
துகளறுசங் கற்பகவிற் பங்களெல்லாந்
தோயாத அறிவாகிச் சுத்த மாகி
நிகரில்பசு பதியான பொருளை நாடி
கெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம். 2