5. மௌனகுரு வணக்கம்
ஆசைநிக ளத்தினை நிர்த்தூளி படவுதறி
ஆங்கார முளையைஎற்றி
அத்துவித மதமாகி மதம்ஆறும் ஆறாக
அங்கையின் விலாழியாக்கிப்
பாசஇருள் தன்னிழ லெனச்சுளித் தார்த்துமேல்
பார்த்துப் பரந்தமனதைப்
பாரித்த கவளமாய்ப் பூரிக்க வுண்டுமுக
படாமன்ன மாயைநூறித்
தேசுபெற நீவைத்த சின்முத்தி ராங்குசச்
செங்கைக் குளேயடக்கிச்
சின்மயா னந்தசுக வெள்ளம் படிந்துநின்
திருவருட் பூர்த்தியான
வாசமுறு சற்சார மீதென்னை யொருஞான
மத்தகச மெனவளர்த்தாய்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 1.
ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும்
அடங்கவெளி யாகவெளிசெய்
தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள்
அறிவாக நின்றநிலையில்
சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல்
சின்மயா னந்தவெள்ளந்
தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ
செய்சித்ர மிகநன்றுகாண்
எந்தைவட வாற்பரம குருவாழ்க வாழஅரு
ளியநந்தி மரபுவாழ்க
என்றடியர் மனமகிழ வேதாக மத்துணி
பிரண்டில்லை யொன்றென்னவே
வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி
மௌனோப தேசகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 2.
ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கென்
அறிவன்றி யிடமில்லையோ
அந்தரப் புட்பமுங் கானலின் நீருமோர்
அவசரத் துபயோகமோ
போதித்த நிலையையும் மயக்குதே அபயம்நான்
புக்கஅருள் தோற்றிடாமல்
பொய்யான வுலகத்தை மெய்யா நிறுத்தியென்
புந்திக்குள் இந்த்ரசாலஞ்
சாதிக்கு தேயிதனை வெல்லவும் உபாயம்நீ
தந்தருள்வ தென்றுபுகல்வாய்
சண்மத ஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த
சமரசநிர் வாகநிலையும்
மாதிக்கொ டண்டப் பரப்பெலாம் அறியவே
வந்தருளு ஞானகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 3.
மின்னனைய பொய்யுடலை நிலையென்றும் மையிலகு
விழிகொண்டு மையல்பூட்டும்
மின்னார்க ளின்பமே மெய்யெம்றும் வளர்மாட
மேல்வீடு சொர்க்கமென்றும்
பொன்னையழி யாதுவளர் பொருளென்று போற்றிஇப்
பொய்வேட மிகுதிகாட்டிப்
பொறையறிவு துறவீதல் ஆதிநற் குணமெலாம்
போக்கிலே போகவிட்டுத்
தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திடத்
தரணிமிசை லோகாயதன்
சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த
சமரச சிவாநுபூதி
மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பின்
வாழ்வித்த ஞானகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 4.
போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
புசித்தற் கிருக்குமதுபோல்
புருடர்பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம்
புகலுமதி னாலாம்பயன்
ஞானநெறி முக்யநெறி காட்சியனு மானமுதல்
நானாவி தங்கள் தேர்ந்து
நான்நான் எனக்குளறு படைபுடை பெயர்ந்திடவும்
நான்குசா தனமும்ஓர்ந்திட்
டானநெறி யாஞ்சரியை யாதிசோ பானமுற்
றணுபஷ சம்புபஷம்
ஆமிரு விகற்பமும் மாயாதி சேவையும்
அறிந்திரண் டொன்றென்னுமோர்
மானத விகற்பமற வென்றுநிர் பதுநமது
மரபென்ற பரமகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 5.
கல்லாத அறிவுமேற் கேளாத கேளாத கேள்வியுங்
கருணைசிறி தேதுமில்லாக்
காட்சியும் கொலைகளவு கட்காமம் மாட்சியாக்
காதலித் திடுநெஞ்சமும்
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள்
பொருந்துகுணம் ஏதும்அறியேன்
புருடர்வடி வானதே யல்லாது கனவிலும்
புருடார்த்தம் ஏதுமில்லேன்
எல்லா மறிந்தநீ யறியாத தன்றெனக்
கெவ்வண்ணம் உய்வண்ணமோ
இருளையிரு ளென்றவ்ர்க் கொளிதா ரகம்பெறும்
எனக்குநின் னருள்தாரகம்
வல்லா னெனும்பெய ருனக்குள்ள தேயிந்த
வஞ்சகனை யாளநினையாய்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 6.
கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின்
கண்காண மதயானைநீ
கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய
கட்டைமிக ஏந்திவருமே
போனகம் அமைந்ததென அக்காம தேனுநின்
பொன்னடியில் நின்றுசொலுமே
புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப்
போற்றிசய போற்றிஎன்பார்
ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
நவநாத சித்தர்களும்உன்
நட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர்முதல்
ஞானிகளும் உனைமெச்சுவார்
வானகமும் மண்ணகமும் வந்தெதிர் வணங்கிடும்உன்
மகிமையது சொல்லஎளிதோ
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 7.
சருகுசல பட்சணிக ளருகோடி யல்லால்
சகோரபட் சிகள்போலவே
தவளநில வொழுகமிர்த தாரையுண் டழியாத
தன்மைய ரனந்தகோடி
இருவினைக ளற்றிரவு பகலென்ப தறியாத
ஏகாந்த மோனஞான
இன்பநிட் டையர்கோடி மணிமந்த்ர சித்திநிலை
எய்தினர்கள் கோடிசூழக்
குருமணி யிழைத்திட்ட சிங்கா தனத்தின்மிசை
கொலுவீற் றிருக்கும்நின்னை
கும்பிட் டனந்தமுறை தெண்டனிட் டென்மனக்
குறையெலாந் தீரும்வண்ணம்
மதுமல ரெடுத்துனிரு தாளையர்ச் கிக்கவெனை
வாவென் றழைப்பதெந்நாள்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 8.
ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
ஆணவத் தினும்வலிதுகாண்
அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
யாதொன்று தொடினும் அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
தம்மொடு சமானமென்னுந்
தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
திராவணா காரமாகி
இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
திருக்கும்இத னொடெந்நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ
மௌனோப தேசகுருவே
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 9.
பற்றுவெகு விதமாகி யொன்றைவிட் டொன்றனைப்
பற்றியுழல் கிருமிபோலப்
பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள்
பகர்ந்துமறி யேன்துவிதமோ
சிற்றறிவ தன்றியும் எவரேனும் ஒருமொழி
திடுக்கென் றுரைத்தபோது
சிந்தைசெவி யாகவே பறையறைய வுதரவெந்
தீநெஞ்சம் அளவளாவ
உற்றுணர உண்ர்வற்றுன் மத்தவெறி யினர்போல
உளறுவேன் முத்திமார்க்கம்
உணர்வதெப் படியின்ப துன்பஞ் சமானமாய்
உறுவதெப் படியாயினும்
மற்றெனக் கையநீ சொன்னவொரு வார்த்தையினை
மலையிலக் கெனநம்பினேன்
மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
மரபில்வரு மௌன குருவே. 10.