Thayumanvar Songs – சின்மயானந்தகுரு

4. சின்மயானந்தகுரு

பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப
அன்பினா லுருகிவிழிநீர்
ஆறாக வாராத முத்தியின தாவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி
தழுதழுத் திடவணங்குஞ்
சன்மார்க்க நெறியிலாத் துன்மர்க்க னேனையுந்
தண்ணருள் கொடுத்தாள்வையோ
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
தொழுதருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே
சொரூபாநு பூதிகாட்டிச்
செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர்
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.1 .

ஆக்கையெனும் இடிகரையை மெய்யென்ற பாவிநான்
அத்துவித வாஞ்சையாதல்
அரியகொம் பில்தேனை முடவனிச் சித்தபடி
ஆகும்அறி வலிழஇன்பந்
தாக்கும்வகை யேதிநாட் சரியைகிரி யாயோக
சாதனம் விடித்ததெல்லாஞ்
சன்மார்க மல்லஇவை நிற்கஎன் மார்கங்கள்
சாராத பேரறிவதாய்
வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து
வாய்க்கும் படிக்குபாயாம்
வருவித் துவட்டாத பேரின்ப மானசுக
வாரியினை வாய்மடுத்துத்
தேக்கித் திளைக்கநீ முன்னிற்ப தென்றுகாண்
சித்தாந்த முத்திமுத்லே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 2 .

ஔவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம்
அடைந்திட் டிருக்கலோபம்
அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல்
ஆசா பிசாபமுதலாம்
வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு
மெய்யன்நீ வீற்றிருக்க
விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர்
விரிக்கிலுரை வேறுமுளதோ
கவ்வுமல மாகின்ற நாகபா சத்தினால்
கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை
கடிதகல வலியவரு ஞானசஞ் சீவியே
கதியான பூமிநடுவுட்
செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 3 .

ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள்
அசரசர பேதமான
யாவைவும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை
யாதிநூ லையும்வகுத்துச்
சைவமுத லாம் அளவில் சமயமும் வகுத்துமேற்
சமயங் கடந்தமோன
சமரசம் வகுத்தநீ யுன்னையான் அணுகவுந்
தண்ணருள் வகுக்க இலையோ
பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே
பொய்யிலா மெய்யரறிவில்
போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்
போக்குவர வற்றபொருளே
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 4 .

ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்
ஆகின்ற ஆக்கைநீர்மேல்
அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்
அறியாத காலமெல்லாம்
புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே
போந்தநெறி என்றிருன்ந்தேன்
பூராய மாகநின தருள்வந் துணர்த்த இவை
போனவழி தெரியவில்லை
எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
இறப்பொடு பிறப்பையுள்ளே
எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
திருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகான தங்கம் இவை என்கொலோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 5.

காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போற்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுதமூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற உறுக்கி இடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 6.

கருமருவு குகையனைய காயத்தின் நடுவுள்
களிம்புதோய் செம்பனையயான்
காண்டக இருக்கநீ ஞான அனல் மூட்டியே
கனிவுபெற உள்ளுருக்கிப்
பருவம தறிந்துநின் னருளான குளிகைகொடு
பரிசித்து வேதிசெய்து
பத்துமாற் றுத்தஙக மாக்கியே பணிகொண்ட
பக்ஷத்தை என்சொல்லுகேன்
அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம்
ஆதியாம் அந்தமீதும்
அத்துவித நிலையராய் என்னையாண் டுன்னடிமை
யான வர்க ளறிவினூடுந்
திருமருவு கல்லா லடிக்கீழும் வளர்கின்ற
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 7.

கூடுத லுடன்பிரித லற்றுநிர்த் தொந்தமாய்க்
குவிதலுடன் விரிதலற்றுக்
குணமற்று வரவினொடு போக்கற்று நிலையான
குறியற்று மலமுமற்று
நாடுதலு மற்றுமேல் கீழ்நடுப் பக்கமென
நண்ணுதலு மற்றுவிந்து
நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று
ஞாதுருவின் ஞானமற்று
வாடுதலு மற்றுமேல் ஒன்றற் றிறண்டற்று
வாக்கற்று மனமுமற்று
மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே
வாய்மடுத் துண்டவசமாய்த்
தேடுதலு மற்றவிட நிலையென்ற மெளனியே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 8.

தாராத அருளெலாந் தந்தருள மெளனியாய்த்
தாயனைய கருணைகாட்டித்
தாளிணையென் முடிசூட்டி அறிவிற் சமாதியே
சாசுவத சம்ப்ரதாயம்
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்திநிலை
ஒன்றோ டிரண்டெனாமல்
ஒளியெனவும் வெளியெனவும் உருவெனவும் நாதமாம்
ஒலியெனவும் உணர்வறாமல்
பாராது பார்ப்பதே ஏதுசா தனமற்ற
பரமஅநு பூதிவாய்க்கும்
பண்பென் றுணர்த்தியது பாராம லந்நிலை
பதிந்தநின் பழவடியாதஞ்
சீரா யிருக்கநின தருள் வேண்டும் ஐயனே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 9.

போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப்
புனிதமாய் அவிகாரமாய்ப்
போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின்
பூரணம் புகலிடமதா
ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின்
அருள்பின்னும் அறிவின்மைதீர்த்
தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற்
கறிவாவ தேதறிவிலா
ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக்
கீடான காயமேதென்
இச்சா சுதந்தரஞ் சிறிதுமிலை இகபரம்
இரண்டினுள் மலைவுதீரத்
தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 10.

பத்திநெறி நிலைநின்றும் நவகண்ட பூமிப்
பரப்பைவல மாகவந்தும்
பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும்
பசிதாக மின்றியெழுநா
மத்தியிடை நின்றும்உதிர் சருகுபுனல் வாயுவினை
வன்பசி தனக்கடைத்து
மெனத் திருந்தும்உயர் மலைநுழைவு புக்கியும்
மன்னுதச நாடிமுற்றுஞ்
சுத்திசெய் தும்மூல ப்ராணனோ டங்கியைச்
சோமவட் டத்தடைத்துஞ்
சொல்லரிய அமுதுண்டும் அற்பவுடல் கற்பங்கள்
தோறும்நிலை நிற்கவீறு
சித்திசெய் துஞ்ஞான மலதுகதி கூடுமோ
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே. 11.