Ganga Snanam – கங்கா ஸ்நானம்

தீபாவளி அன்று “கங்கா ஸ்நானம்” செய்ய வேண்டும் என்பது நம் தமிழ் மரபு. ஆனால் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு மாறிப்போன கலாச்சாரம் ஆகிவிட்டது.

மக்களுக்கு பல வழிகளில் தொல்லைகள் தந்து சிரமப்படுத்திய நரகாசுரன் என்ற அசுரனை அவனது தாயான சத்யபாமாவைக் கொண்டே வதம் செய்தார் கிருஷ்ணர். தன் மகன் இறப்பை மக்கள் ஆனந்தத்துடன் கொண்டாடுவதைக் கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம், “என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப்பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். நல்லெண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்” என வேண்டினாள். அதிகாலை குளிப்பதால் மக்களுக்கு குளிரும் வாட்டக்கூடாது என்பதால் அன்று மட்டும் வெந்நீரில் குளிக்கவும் அனுமதிப் பெற்றுத்தந்தாள். கிருஷ்ண பரமாத்மாவும் அவ்வாறே நடக்கும் என அனுக்கிரகம் செய்தார். இவ்வாறு தீபாவளி அன்று அதிகாலையில் நாம் செய்யும் புனித நீராடலே ‘கங்கா ஸ்நானம்’ என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு குளிக்கத் தேவையான நல்லெண்ணையில் ஓமம், மிளகு, மஞ்சள்பொடி, வெற்றிலை போட்டு காய்ச்சி எடுத்து வைக்கவேண்டும். மறுநாள் அதிகாலை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துக்கொண்டு, சீயக்காய் போட்டு நீராடவேண்டும்.

எண்ணெய் தேய்க்கும் முன், முதலில் குழந்தைகளை உட்காரவைத்து, வீட்டின் முதிய பெண்மணி ‘கௌரி கல்யாணம்’ அல்லது வேறு ஏதேனும் மங்கலமானப் பாடலைப் பாடி, மூன்று சொட்டு நல்லெண்ணெயை முதலில் தலையில் வைக்கவேண்டும், ஆண் குழந்தைகள் என்றால்,

‘அஸ்வத்தாம, பலி, வியாச, க்ருப, ஹனும, விபீஷண பரசுராம‌’

என்று ஏழு சிரஞ்சீவிகள் பெயரைச் சொல்லி வலக்கையில் ஏழு போட்டு எண்ணெய் வைத்து, பின் தலையில் எண்ணெய் வைக்கவேண்டும்,

பெண் குழந்தைகள் என்றால்,

“அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசனம்’

என்று உச்சரித்து எண்ணெய் வைக்கலாம்.

கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முஹுர்த்த 4.30 – 5.30. அன்று நாம் அனைவரும் அலைமகளை நினைதது மங்கள நீராடி பாவவினைகளைப் போக்கி செல்வமும், ஆரோக்கியமும் பெற்று வளமாக வாழ்வோம்!