Mahabharatham story in Tamil 56 – மகாபாரதம் கதை பகுதி 56

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 56

எல்லாரும் அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கடும் காற்று அடித்தது. அந்த காற்றின் வேகத்தை தாங்க முடியாத கீசகன் தடுமாறினான். சற்று தூரத்தில் பெரும் சூராவளியான அந்தக் காற்று கீசகனை தூக்கி வீசியது. திரவுபதி, சூரியபகவானை வேண்டிக்கொண்டதால், கிங்கரர்களில் ஒருவனை அவன் பூமிக்கு அனுப்பினான். அந்த கிங்கரனே, சுழற்காற்றாக மாறி வந்து கீசகனை மட்டும் தூக்கி எறிந்தான் என்பதை யாரும் அறியவில்லை. அவையில் இருந்த மன்னனோ, இதையெல்லாம் கண்டும் காணாதவன் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். திரவுபதிக்கோ கடும் ஆத்திரம். மன்னா! விரும்பாத ஒருத்தியை ஒரு காமுகன் சூறையாட வருகிறான். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். அநீதியைக் கண்முன் கண்டும், அதைத் தடுக்க இயலாத நீ அரசாங்கத்தை நடத்த தகுதியுள்ளவன் தானா? என்றாள். அதற்கும் மன்னன் பதிலளிக்கவில்லை. கீசகன், தன் மனைவியின் தம்பி என்பதுடன், அவனது பலத்தின் முன்னால் தன் ஜம்பம் பலிக்காது என்பதை அவன் அறிவான். மன்னனின் அருகில் இருந்த பீமனுக்கு ரத்தம் கொதித்தது. தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக, வெளியில் நின்ற ஒரு மரத்தை அவன் உற்றுப் பார்த்தான். மரத்தைப் பிடுங்கி, கீசகன் மேல் வீசிவிட அவன் கைகள் துடித்த வேளையில், தர்மர் குறுக்கிட்டார்.

கீசகன் கொல்லப்பட்டால் தாங்கள் யார் என்பது வெளியில் தெரிந்து விடும் என்பதால், தர்மர் பீமனை ஜாடை காட்டி கையமர்த்தினார். பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞான வாசத்தில் யார் என்பது வெளியே தெரியக்கூடாது என்பது துரியோதனனால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை. அப்படி, வெளியே தெரிந்தால் இவர்களுக்கு ராஜ்யம் நிரந்தரமாகக் கிடைக்காது. தர்மர் இதைச் சுட்டிக்காட்டியே பீமனை கையமர்த்தினார். திரவுபதி மீண்டும் மன்னனிடம், மன்னா! இவ்வளவு சொல்லியும் அமைதியாக இருக்கும் உன் போக்கு நல்லதற்கல்ல. உன் நாடு அழிந்து விடும், என சாபம் கொடுத்து விட்டு சுதேஷ்ணை இருக்கும் இடத்திற்கு போய்விட்டாள். கங்கமுனிவர் வேடத்தில் இருந்த தர்மர், இப்போது, மன்னனுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார். யார் தவறு செய்தாலும், தட்டிக் கேட்பது மன்னனின் கடமை என உபதேசம் செய்தார். மன்னன் மனம் வருந்தி, அங்கிருந்து எழுந்து சென்றானே தவிர, வேறேதும் செய்ய இயலவில்லை. அன்று இரவில், திரவுபதி பீமனின் அறைக்குக் சென்றாள்.

அன்பரே! கீசகனால், என் கற்புக்கு எந்நேரமும் ஆபத்து என்பது உறுதியாகி விட்டது. தாங்கள் தான் இந்நிலையில் என்னைக் காப்பாற்றத்தக்கவர். கீசகன் கொல்லப்பட வேண்டும். அதே நேரத்தில் அது வெளியில் தெரியாமல் செய்யப்பட வேண்டும். தாங்கள் அவனைக் கொல்ல யோசனை செய்யுங்கள். அது இன்றே நடக்க வேண்டாம். இரண்டு நாள் விட்டு விடுவோம். பின்னர் அவனைக் கொன்றுவிட்டு, கந்தவர்கள் கொன்று விட்டதாக கதை கட்டி விடலாம். மன்னன் நீதி தவறி விட்டான். தவறிய விஷயம் இந்நாட்டு மக்களிடமும் பரவி விட்டது. அவர்களும் மன்னன் மீது வெறுப்புடனேயே உள்ளனர். இச்சமயத்தில் கீசகனின் கொலை பெரிய பாதிப்பை நாட்டில் உண்டாக்கிவிடாது, என்றாள். பீமன் அவளது புத்திசாலிதனத்தை மெச்சினான். கவலையின்றி உறங்கும்படி சொல்லி அவளை அனுப்பிவிட்டான். இரண்டு நாட்கள் கடந்தது. காற்றால் தூக்கி வீசப்பட்ட கீசகன் உடல் வலி தாங்காமல் அரண்மனையிலே முடங்கிக் கிடந்தான். வலி தீர்ந்ததும் மீண்டும் திரவுபதியின் நினைவு எழ, தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள அவள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தான். அவனைக் கண்டதுமே அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

பெண்ணே! ஏன் இந்த தயக்கம். இந்த விராடமகாராஜனே என் வீரத்தால் தான் இந்தளவுக்கு பெருமையடைந்துள்ளான். உன்னைக் காக்க ஐந்து கந்தவர்கள் இருப்பதாக முன்பு சொன்னாய். இவ்வளவு நடந்தும் அவர்களும் உன்னைப் பாதுகாக்க வராததற்கு காரணமே என் வீரத்திற்கு பயந்துதான். எனவே இந்த மாவீரனை நீ அணைத்துக் கொள், என்றான். திரவுபதி அழுவதை நிறுத்தினாள். புத்தி வேகமாக வேலை செய்தது. கீசகா! நீ சொல்வது சரிதான். என்னை என் ஐந்து கந்தவர்களே பாதுகாக்க வராத போது, அவர்களை நம்பி என்ன பயன்? நீ சுத்தவீரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இன்றிரவில் நீ அரண்மனைத் தோட்டத்திலுள்ள பளிங்கு மண்டபத்துக்கு வா, என்றாள். அன்றிரவில் கீசகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கு சென்றான். அங்கே, அழகே வடிவாய் ஒரு கம்பத்தைக் கட்டிப்பிடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த திரவுபதியை வர்ணித்தான். அவள் காலில் விழுந்து, என் காம நோயை நீக்கு பெண்ணே! இனி பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன், என புலம்பினான்.

அவ்வளவு தான் நடந்திருக்கும்! அவனை நோக்கி திரும்பிய அந்தப் பெண், அவனை அலாக்காகத் தூக்கினாள். கரகரவென சுற்றி மேலே வீசி எறிந்தாள். கீசகன் சுதாரித்து விட்டான். வந்திருப்பது பெண் வேடத்தில் வந்த யாரோ ஒரு ஆண் என்பதை! ஆம்… சாட்சாத் நம் பீமன் தான் அங்கே ஆஜானுபாகுவாக நின்றான். விஷயத்தைப் புரிந்து கொண்ட கீசகனும் அவனுடன் கடுமையாக போரிட்டான். இருவரும் சமபலமுடைய வீரர்கள் என்றாலும், கீசகன் செய்த தீவினை அவனுக்கு எதிராக மாறி, அவனைக் கொன்றது. பலசாலிகள், தங்கள் பலத்தை நல்லவழியில் செலவிட்டால் அவர்களுக்கும் புண்ணியம். மற்றவர்களுக்கும் நன்மை கிடைக்கும். ஆனால், பலத்தைப் பயன்படுத்தி எளியவர்களைத் துன்புறுத்தினால், கீசகனின் கதிதான் ஏற்படும்.

திரவுபதி மகிழ்ந்தாள். அவள் பீமனின் காலில் விழுந்து ஆசி பெற்று விடை பெற்றாள். ஆனால், திரவுபதியை துன்பம் துரத்தியது. கீசகனின் தம்பிமார்களான உபகீசகர்கள் தங்கள் அண்ணன் கொல்லப்பட்டதை அறிந்து, சுதேஷ்ணையிடம் போய் சொல்லி அழுதனர். கோப வெறியுடன், தங்கள் அண்ணன் சாவுக்கு விரதசாரிணி என்ற பெண்ணைக் காப்பாற்றும் கந்தவர்கள் தான் காரணம் என்பதால், அண்ணனின் சிதை மூட்டும் போது, அந்தப் பெண்ணையும் நெருப்பில் தள்ளிவிட வேண்டுமென முடிவெடுத்து, திரவுபதியின் அறை நோக்கி விரைந்தனர்.