பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும் | Different kinds of Pradosham and benefits

பிரதோஷ வழிபாடும் அதன் சிறப்புகளும் | Different kinds of Pradosham and benefits

பிரதோஷம்

பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம்.

பிரதோஷம் என்பது பாவங்களை தொலைத்துக் கொண்டு மோட்ஷத்தை அடைய செய்யப்படும் வழிபாடு ஆகும். பிரதோஷம் அதாவது பிரதி + தோஷம் என இரு வார்த்தைகளைக் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு பாபத்தையும் தொலைத்து புண்ணியத்தை தேடும் வழிபாடு ஆகும். மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரக்கூடிய சனி பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ சிறப்புகள்பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

பிரதோஷ வழிபாடு

ஒவ்வொரு மாதமும் சுக்ல மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் திரியோதசியன்று மாலை நேரத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடும் நேரத்தில் அவரை வணங்கினால் நம் வேண்டுதல்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் நந்தியை, சிவனையும் வில்வம், அருகம்புல் சாத்தி வழிபட வேண்டும். பிரதோஷ பூஜையின் நிறைவாக பார்வதி தேவியுடன், ஈசன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவார். முதல் சுற்றின் போது வேத பாராயணமும், இரண்டாவது சுற்றின் போது திருமுறை பாராயணமும், மூன்றாவது சுற்றின் போது நாதஸ்வர இன்னிசையும் இசைக்கப்படும்.

ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்ட பலனை பெற்று விடலாம். ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஐந்து ஆண்டுகள் சிவாலயத்தில் தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பார்கள். திங்கள் கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம் என்றும் சிறப்பு பெறுகின்றன.

பிரதோஷத்தில் ஐந்து வகைககள் உண்டு.

1.நித்தியப் பிரதோஷம்

2.பக்ஷப் பிரதோஷம்

3.மாதப் பிரதோஷம்

4.மகா பிரதோஷம்

5.பிரளயப் பிரதோஷம்.

நித்தியப் பிரதோஷம்

ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், ‘நித்தியப் பிரதோஷம்’ எனப்படும்.

பக்ஷப் பிரதோஷம்

வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.

மாதப் பிரதோஷம்

தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.

மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.

பிரளய பிரதோஷம்

பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே ‘பிரளய பிரதோஷம்’ என அழைக்கப்படுகிறது.