மகாளய அமாவாசையின் முக்கியத்துவம்:
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.
அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஹாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.
மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன.
- 1ம் நாள் – பிரதமை – செல்வம் சேரும்
- 2ம் நாள் – துவிதியை – பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.
- 3ம் நாள் – திரிதியை – நினைத்த காரியங்கள் நிறைவேறும்
- 4ம் நாள் – சதுர்த்தி – பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.
- 5ம் நாள் – பஞ்சமி – அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.
- 6ம் நாள் – சஷ்டி – பேரும், புகழும் தேடி வரும்.
- 7ம்நாள் – சப்தமி – தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.
- 8ம் நாள் – அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.
- 9ம் நாள் நவமி – நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.
- 10ம் நாள் – தசமி – நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.
- 11ம் நாள் – ஏகாதசி – கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.
- 12ம் நாள் – துவாதசி – ஆபரணங்கள் சேரும்.
- 13ம் நாள் – திரயோதசி – விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.
- 14ம் நாள் – சதுர்த்தசி – பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.
- 15ம் நாள் – மஹாளய அமாவாசை – அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
Read More:
Why don’t we eat non veg foods in the month of Purattasi?
Purattasi Viratham Scientific Reason
Purattasi Virathangal in Tamil – புரட்டாசி விரதங்கள்
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal
Purattasi-Story,Significance And Spirituality-தமிழ் மாதங்களில் புரட்டாசி
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?