கார்த்திகை நட்சத்திர விரதம்
கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.
கார்த்திகை விரதம் இருக்கும் முறை:
கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும். மாலையில் வீட்டில் உள்ள முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தூப தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். தேவரிஷிகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார்.