Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-18
பரமாத்மா மட்டுமா வந்தார்! அவரது தந்தை வசுதேவர், தாய் தேவகி, குந்தியின் தந்தை குந்திபோஜன் மற்றும் உறவுகளெல்லாம் வந்தனர். பெரிய துக்கமல்லவா! கண்ணனுக்கு குந்தி அத்தை. ஏனெனில், அர்ஜூனன் கண்ணனின் சகோதரி சுபத்ராவைத் திருமணம் செய்தவன். மைத்துனரின் தந்தையல்லவா மரணமடைந்திருப்பவர். மகளின் துக்கத்தில் பங்குகொள்ள குந்திபோஜனும் வந்துவிட்டான். எல்லோரும் நெருங்கிய சொந்தங்கள்.
பீஷ்மர், விதுரன் ஆகிய மகாத்மாக்கள் கூட குந்தி புத்திரர்களின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். பரமாத்மா கண்ணன் மட்டும் பாரதத்தின் எந்த மூலையிலும், ஏன் அவரது இந்த அவதாரத்தில் எங்குமே கண்ணீர் வடித்ததில்லை. அவர் ஒரு புன்னகை மன்னன். ஏனெனில், நடக்கின்ற சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமே அவர் தானே! மேலும், அழ வேண்டியதையெல்லாம் இதற்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்திலேயே அழுது தீர்த்துவிட்டாரே! போதாதா! கண்ணனின் தாய் தேவகி துக்கத்தில் ஆழ்ந்திருந்த குந்திக்கு சொன்ன ஆறுதல் மொழிகள் கொஞ்ச நஞ்சமல்ல! பெண்கள் ஒருபுறமிருக்க, ஆண்கள் ஒருபுறம் எதிர்காலம் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
திருதராஷ்டிரனின் அண்ணன் மகாத்மா விதுரர், கண்ணா! பூபாரம் தீர்க்க வந்தவனே! உன் உதவி இருக்கும்போது பாண்டவர்களுக்கு என்ன கவலை. நீ தான் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும், என்றார். கண்ணனும் அதை ஆமோதித்தார்.
வந்த விஷயம் முடிந்ததும், அவர்கள் திரும்பி விட்டனர். துக்கவீட்டில் ரொம்ப நாள் தங்கக்கூடாது. வந்தோமா, போனோமா என்று இருக்க வேண்டும் என்ற நீதி இங்கே எடுத்துச் சொல்லப்படுகிறது. இப்படியிருக்க, ஆரம்பத்தில் துரியோதன சகோதரர்கள், பாண்டு புத்திரர்களுடன் நன்றாகத்தான் இருந்தனர். ஆனால், பீமன் மட்டும் யாருடனும் ஒத்துப்போக மாட்டான். சிறுவன் தான் என்றாலும், துரியோதன சகோதரர்களை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதற்காக அவன் வம்பு செய்வதில்லை. ஒதுங்கி இருந்து கொண்டான். இந்தப்போக்கு துரியோதனனுக்கு பிடிக்கவில்லை. அவன் தன் மாமா சகுனியிடம் ஓடினான். காந்தாரியின் அண்ணன் தான் இந்த சகுனி. தங்கை வீட்டில் தங்கியிருப்பவன்.
மாமா! இந்த பீமன் மட்டும் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. பெரிய முரடன். ஏதாவது பேசினால் முறைக்கிறான். வம்புக்கு போனால் வேறு வினையே வேண்டாம். அவன் என் மீது விழுந்தாலே போதும். நான் தரையோடு தரையாக நசித்துப் போய்விடுவேன். அரண்மனையில் வேகும் அரிசியில் பாதிக்கு மேல் இவனுக்கே போய்விடுகிறது. இந்தப்பயலை அடக்க ஒரு வழி சொல்லுங்களேன், என்றான். இந்த சகுனிக்கு பாண்டு புத்திரர்களின் நாட்டையும் சேர்த்து கொள்ளையடிக்க ஆசை. அதற்கு தடையாக இருந்த பாண்டு ஒழிந்து விட்டான். குந்தியோ, இவர்கள் பிடியில். இந்த சிறுவர்களாலும் ஏதும் செய்ய முடியாது. காலம் கனியட்டும் என காத்திருப்பவன். மருமகனே! இதென்ன பிரமாதம்! இதோ! உன் நண்பன் கர்ணன் இங்கே தான் படுத்திருக்கிறான். அவனை துணைக்கு வைத்துக் கொள். பீமன் தூங்கும் போது அவனை கட்டு. அப்படியே தூக்கிக் கொண்டு போய் கங்கையின் நடுவில் வீசிவிடு, என அந்த பிஞ்சுமனத்தில் கொலை வெறியை விதைத்தான்.
கர்ணனும், துரியோதனனும் விரைந்தனர். உறங்கிக் கொண்டிருந்த பீமனை காட்டுக்கொடிகளைக் கண்டு கட்டினர். பீமன் திமிறினான். அவனை ஒரு
படகில் ஏற்றி, கங்கையின் நடுவே தள்ளிவிட்டனர். பீமனாவது, இதற்கெல்லாம் மசிவதாவது! தண்ணீரில் மூழ்கியவன், ஏதோ சந்தோஷமாகக் குளிப்பவன் போல தலையை இங்கும் அங்கும் அசைத்தான். தன் பலத்தை ஒன்றுதிரட்டி கையை உதறினான். காட்டுக்கொடி போன இடம் தெரியவில்லை. ஒரே மூச்சில் வெளியே வந்தான். கர்ணனும், துரியோதனனும் அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் வருவதற்கு முன்பே, அரண்மனை சிம்மாசனத்தில் குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருந்தான். ஆசாமிகள் இருவருக்கும் கடும் அதிர்ச்சி! இவனை தண்ணீரீல் வீசினால், நாம் திரும்புவதற்குள் இவன் வந்து விட்டானே. ஏ கர்ணா! இவன் கண்ணில் படாதே. பட்டால், இந்த இடத்திலேயே அடிப்பான். இங்கே வந்தால், நாம் 101 பேரும் சேர்ந்து தான் வரவேண்டும் புரிகிறதா? என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
மறுநாள் பீமனுடன் சமாதானம் செய்வது போல் நடித்துக்கொண்டான். பீமா! நீ எவ்வளவு பலசாலி என்பதை நேற்றே தெரிந்து கொண்டேன். வா! இன்றும் விளையாடப் போகலாம், என்று அழைத்தான். பீமனும் கிளம்பிவிட்டான். அவனுக்குத் தெரியும்! துரியோதனன் ஏதோ சதித்திட்டத்துடன் தான் அழைக்கிறான் என்று! அன்றும் கங்கையில் தான் விளையாட்டு. தண்ணீர் அலைகளை வாரி இறைத்துக்கொண்டு மின்னலென போய்க் கொண்டிருந்தது. முதலில் துரியோதனன் கங்கையில் குதித்து நீராடினான். பீமா! நீ இந்த இடத்தில் குதி, என ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினான். பீமனின் கண்கள் ஆழ்ந்த பார்வை கொண்டவை. துரியோதனன் குதிக்க சொன்ன இடத்தில் ஏதோ நீட்டிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது.
மேற்பகுதியில் ஏதோ வண்டு போலவும் இருந்தது. ஆராய்ந்து பார்த்ததில் அத்தனையும் ஈட்டிகள் என்பதும், பீமன் குதித்ததும் அவை அவனை குத்திக்கிழிப்பது போலவும் நேராக நடப்பட்டிருந்தன. பீமன் சுதாரித்து விட்டான். எந்த இடம் வரை ஈட்டிகள் நடப்பட்டிருந்ததோ, அதைத் தாண்டி குதித்து, ஒன்றுமே தெரியாதவன் போல கரையேறி விட்டான். துரியோதனின் இந்த திட்டமும் வீணானது. துரியோதனன் துடிதுடித்தான். இவனுக்கு இதெல்லாம் சரி வராது. இந்தப்பயலைக் கொல்ல ஒரே வழி சாப்பாடு தான். இவனோ சாப்பாட்டு ராமன். சாப்பாட்டில் விஷம் கலந்து விட்டால், இஷ்டத்துக்கு அள்ளித்தின்று எமலோகம் போய்விடுவான் என திட்டமிட்டான். நினைத்தது போலவே நடத்தியும் காட்டினான். உணவில் விஷம் கலந்தது தெரியாமல், பீமன் அத்தனையையும் சாப்பிட்டான். அவனது கண்கள் சுழன்றன.