Mahabharatham Story in Tamil – மகாபாரதம் பகுதி-15
பாய்ந்து சென்ற அம்பு அந்த மான்களை ரத்தச்சேற்றில் தள்ளியது. இரண்டும் உயிருக்கு துடிதுடித்தன. பாண்டுவின் மனைவியர் தன் கணவனின் திறமை கண்டு புளகாகிதமடைந்திருந்த வேளையில், அந்த ஆண்மான் ஒரு தவசீலனாக உருவெடுத்தது. அந்த முனிவர் பாண்டுவிடம் கோபத்துடன் வந்தார். பாண்டு அவரிடம், தவசீலரே! நான் பாண்டு மன்னன். வேட்டைக்காக வந்த இடத்தில் மான்களை நோக்கி அம்பெறிந்தேன். ஆனால், நீங்கள் மானிட உருவம்…அதிலும் முனிவராக வந்து நிற்கிறீர்கள். தாங்கள் யார்? என்றான் பதட்டத்துடனும் பணிவுடனும்.
முனிவர் அவனது பணிவு கண்டு சற்றே கோபம் அடங்கி, மன்னா! என் பெயர் கிந்தமன். முனிவர்களுக்கு எப்போதாவது ஒருமுறை இன்ப உணர்வு தலை தூக்கும். அந்த உணர்வை மன்மதன் என்னிடம் தூண்டி விட்டான். நான் அதை தாங்கமுடியாமல் தவித்தேன். இந்த நடுக்காட்டில் என்னால் என்ன செய்ய இயலும்? எனவே, நானும் என் மனைவியும் மான்களாக மாறி கூடி களித்துக் கொண்டிருந்தோம். அந்த வேளையில் நீ எங்கள் மீது அம்பெய்தாய். எங்கள் இன்பத்தை தொலைத்து விட்டாய். உலகிலேயே கொடிய பாவம், இன்பமுற்றிருக்கும் தம்பதிகளைப் பிரிப்பதாகும். அது உனக்குத் தெரியுமல்லவா? என்றார். அறிவேன் முனிவரே! ஆனாலும், இதுதெரியாமல் நடந்துவிட்டது. மன்னிக்க வேண்டும் என்னை, என்ற மன்னனிடம் சற்றும் கருணை காட்டிய முனிவர், மன்னா! எங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் பிரித்து விடும்.
இந்த கொலைப்பாவம் உன்னை பிடிக்காது என்றாலும், தம்பதிகளைப் பிரித்த நீ, இனி உன் மனைவிகளிடம் சுகம் கண்டால் இறந்து போவாய், என சாபம் கொடுத்து விட்டு இறந்தார். பெண் மான் வடிவத்தில் இருந்த அவரது மனைவியும் சுயவடிவம் எடுத்து அக்னியில் விழுந்து மாண்டாள். பாண்டு கலங்கிப் போனான். ஐயோ! இனி நான் தாம்பத்ய வாழ்வு நடத்த முடியாதா? எனக்கு இரண்டு பட்டத்தரசிகள் இருந்தும் அவர்களைத் தொட முடியாதவன் ஆகிவிட்டேனே? இந்த தேசம் என்னாகப் போகிறதோ? அவன் கண்ணீர் வடித்தான். பின்னர் தன் மனைவியருடன் வனத்திற்கு சென்று அங்குள்ள தவசாலை ஒன்றில் தங்கினான். அங்கிருந்த போது அவனுக்கு ராஜாங்க காரியங்கள் இல்லாததால், யோசிக்க அதிக நேரம் கிடைத்தது.
நிறைய வேதாந்தங்களையும் கேட்டான். உலகில் மனிதனாகப் பிறந்தவனுக்கு குழந்தை பிறக்காவிட்டால் அவனால் மோட்சத்தை அடைய முடியாது என்று வேதாந்தங்களைப் படித்து தெரிந்து கொண்டான். ஆனால், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு வழியையும் தெரிந்து கொண்டான். குந்தியை அழைத்தான். தங்கள் தாய்மார்களான அம்பிகாவும், அம்பாலிகாவும் வியாசர் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது போல, தர்மத்திற்கு உட்பட்டு, குழந்தைகள் பெற்றுக் கொள்ள தன் மூத்த மனைவி குந்தியை வற்புறுத்தினான். கணவனே இப்படி சொல்லும் போது என்ன செய்வது? அவள் யோசித்த வேளையில், பாண்டு அவளிடம், குந்தி! உனக்கொரு விஷயம் தெரியுமா?
என் தந்தை வியாசமுனிவர் ஒருநாள் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு வந்தார். காந்தாரி அவரிடம் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்தினாள். அவர் தன் சக்தியால் அவளை கர்ப்பமுறச் செய்தாள். அதன் மூலம் நூறு குழந்தைகள் பெறப்போகும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாள் காந்தாரி.
நமக்கும் சந்ததிகள் வேண்டும். நாம் இறந்த பிறகு பிதுர்காரியங்கள் செய்ய பிள்ளைகள் அவசியம் என்பதை நீயே அறிவாய். நீயும் அரச தர்மப்படி, முனிவர்களைச் சேர்ந்து குழந்தைகளைப் பெறு, என்றான். தயங்கி நின்ற குந்தி, அன்பரே! என்னிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. நான் சிறுமியாய் இருந்த போது துர்வாசருக்கு செய்த சேவையால் கிடைத்த சக்தி அது. நான் எந்த தேவனை நினைக்கிறேனோ, அவன் மூலம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே அது. ஆனாலும், கற்புடைய பெண் எப்படி இதற்கு சம்மதிக்க முடியும்? என்று சொல்லி தயங்கினாள். ஆனால், தனக்கு ஒரு குழந்தை ஏற்கனவே பிறந்ததை மறைத்து விட்டாள்.
பாண்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குந்தி, உடனடியாக செயலில் இறங்கு. நமக்கு உடனே பிள்ளைகள் வேண்டும். உம், தேவர்களை வரவழைத்து அவர்களைத்தழுவு. குழந்தைகளைப் பெறு, என பரபரத்தான். நீண்ட வற்புறுத்தலுக்கு பின் நாட்டுநலன் கருதி இந்த யோசனைக்கு சம்மதித்த குந்திதேவி, கணவனை வணங்கினாள். பின்னர் அஞ்சும் தன்மையுடையவனும், அதே நேரம் நீதிமானுமான தர்மராஜாவாகிய எமதர்மனை அழைத்தாள்.
எமன் வந்தான். குந்தியின் அழகில் சொக்கிப்போய் அவளோவு இணைந்தான். ஒரு குழந்தை பிறந்தது. தர்மராஜாவுக்கு பிறந்த அவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயர் சூட்டினாள். இவனே தர்மன் என்றும் அழைக்கப்படுவான். இந்த செய்தி காந்தாரியை எட்டியது. அவள் கர்ப்பமாக இருந்தாளே தவிர, குழந்தை பிறக்கவில்லை. தனக்கு முன்னதாகவே குந்திக்கு குழந்தை பிறந்த செய்தி அவளை வாட்டியது. பொறாமைக்கனல் பொங்கியது. மூத்த மருமகளான நான் குழந்தை பெறும் முன்பு நீ பெற்று விட்டாயா? என்னால் தாங்க முடியவில்லையே, ஆவேசமாக புலம்பினாள். தன் அறையில் அங்குமிங்குமாக தடதடவென நடமாடினாள்.
கர்ப்பஸ்திரீகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அத்தனையும் செய்தாள். இங்கே ஒரு அறிவியல் கருத்தும் விளக்கப்படுகிறது. ஒரு பெண் குழந்தை பெறும் சமயத்தில் நல்ல மனநிலையுடன் இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் நல்லவர்களாக இருப்பார்கள். தங்கள் அறிவை உலகநலனுக்கு பயன்படுத்துவார்கள். அப்படி பிறந்தவன் தான் தர்மன். ஆனால், காந்தாரி என்ன செய்தாள் தெரியுமா? பொறாமையால் தன் வயிற்றில் ஓங்கி அடித்தாள். பொறி கலங்கியது போல் வலி ஏற்பட்டது. வயிற்றில் கர்ப்பம் கலைந்து விட்டது. அவசரப்பட்டு செய்த செய்கைக்காக அவள் அழுது புலம்பினாள். வியாச பகவானே! தங்கள் வரம் பொய்க்கலாமா? எனக்கு கர்ப்பம் கலைந்து விட்டதே, என்ன செய்வேன்? என அரற்றவும், வியாசர் அங்கே தோன்றினார்.