மகாபாரதம் பகுதி-83
ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. அர்ஜுனன், திருஷ்டத்யும்னன் முதலானோரின் அம்புகளுக்கு எதிரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. கவுரவப்படைகள் பின்வாங்கின. முக்கிய அரசர்களெல்லாம் புறமுதுகிட்டு ஓடினர். துரோணரால் இதைத் தாங்க முடியவில்லை. முப்பதாயிரம் படைவீரர்கள் சூழ, அவர் அர்ஜுனனைத் தாக்குவதற்காக முன்னேறி வந்தார். அவரது அம்பு மழையை தாக்குப்பிடிக்க முயன்ற நகுல, சகாதேவர்கள் அது முடியாமல் போனதால் புறமுதுகிட்டு ஓடினர். எப்படியோ தர்மரை நெருங்கி விட்டார் துரோணர். இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அப்போது தர்மர் விடுத்த ஐந்து கொடிய அம்புகளில் ஒன்று துரோணரின் தேரில் இருந்த வேதக்கொடியை அறுத்துத் தள்ளியது. அக்காலத்தில், கொடி சாய்ந்தால் அது மிகவும் அவமானகரமானதாகக் கருதப்படும். ஒரு அம்பு தேர்க்குதிரைகளைக் கொன்றது. இன்னொன்றால் தேர்ப்பாகன் மடிந்தான். நான்காம் அம்பு தேர் சக்கரங்களை நொறுக்கியது. கடைசி அம்பு ஒட்டுமொத்த தேரையே அழித்து விட்டது, இதையடுத்து விடப்பட்ட அம்புகள் துரோணரின் வில்லையே நொறுக்கி விட்டன. நிராயுதபாணியாக நின்ற துரோணரிடம், என் அன்புக்குரிய ஆச்சாரியரே! தாங்களோ வேதம் கற்றவர். தங்களை அழித்தால் வரும் பாவத்தை நான் அறிவேன்.
அக்கொடிய பாவத்தை நான் ஏற்கமாட்டேன். தாங்கள் இங்கிருந்து தாராளமாக பாசறைக்குச் செல்லலாம். ஓய்வெடுத்து விட்டு வேறொரு தேரில் ஆயுதங் களுடன் வாருங்கள், என்றார் தர்மர். துரோணருக்கு வெட்கம் தாளவில்லை. நமக்கு உயிர்பிச்சை கொடுப்பது போல் தர்மன் பேசுகிறானே! இதை விட அவமானம் வேறென்ன இருக்க முடியும்! இவனை இன்று விட்டு வைக்கக்கூடாது என்றவர் மற்றொரு தேரைக் கொண்டு வருவதற்காக புறப்பட்டார். சேனாதிபதியான துரோணருக்கு ஏற்பட்ட அவமானத்தால் கவுரவப்படைகள் கலங்கின. நீங்கள் தோற்றீர்கள்! தோற்றீர்கள் என்று பாண்டவர் படைகள் கவுரவ படைகளைப் பார்த்து கேலி செய்தனர். கவுரவப்படைகள் தலை குனிந்து நின்றதன் மூலம் அதை ஒப்புக்கொண்டனர்.
இந்நேரத்தில், வேறொரு தேரில் ஏறிய துரோணர் புதிய வில்லுடன் தர்மரை நோக்கிச் சென்றார். மீண்டும் இருவருக்கும் போர் துவங்கியது. துரோணருக்கு ஆதரவாக கர்ணன், சகுனி மற்றும் பலர் வந்தனர். தர்மரைக் காக்க நகுல, சகாதேவர், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, பீமன் மகன் கடோத்கஜன் ஆகியோர் வந்தனர். இருதரப்புக்கும் கொடிய போர் நடந்தது. அன்று கோடிக்கணக்கான உயிர்கள் கவுரவர் தரப்பில் பறி போயின. அபிமன்யுவிடமும், கடோத்கஜனிடமும் எதிரிகளால் தாக்குப்பிடிக்க முடியாததே இதற்கு காரணம். கர்ணனும், சகுனியும் அவர்களைக் கண்டு பயந்து ஓடியே விட்டனர். துரோணரைப் பாதுகாக்க ஆளில்லாத நிலையில், அவரும் பின்வாங்க வேண்டியதாயிற்று. பயந்து ஓடிய கர்ணன், துரியோதனனிடம் சென்று, நண்பா! கொடுமையான தகவல் ஒன்றை சொல்லவே வந்தேன். நமது சேனாதிபதி துரோணரே தர்மரின் ல்லாற்றல் முன் தோற்றுப்போனார். இனி நடப்பதற்கு என்ன இருக்கிறது? என்றான்.கோபமும் வருத்தமும் மேலிட, ஆம்…நண்பா! பாண்டவர் ஆட்சி வேரூன்றப்போகிறது என்பது தெளிவாகி விட்டது. இப்போதே நான் களத்துக்குச் செல்கிறேன். பாண்டவர்களைத் துண்டு துண்டாக்குகிறேன், என்று ஆவேசத்துடன் களத்தில் நின்றான். ஆனால், சிறுவன் அபிமன்யுவின் வில்லுக்கு கூட அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் தோற்று ஓடினான். துரோணர் மூன்றாம் முறையாகவும் ஒரு தேரில் ஏறி தர்மரை எதிர்த்தார். அப்போதும் அது நடக்கவில்லை. மூன்றாம் முறையும் அவர் தோற்றுப் போனார். அவருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது எனக் கருதிய சில வீரர்கள் அவரைச் சுற்றி அரணாக நின்று பாதுகாத்து, வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.
அந்நேரத்தில், பாண்டவர்களின் வனவாசத்தின் போது பீமனால் தோற்கடிக்கப்பட்ட பகாசுரனின் தம்பி அசுரன் பகதத்தன் கவுரவர்களுக்கு ஆதரவாகப் போரிட வந்தான். அவனது ஒரே குறி பீமன் தான்! அவன், தன் யானையின் மீதேறி சற்றும் யோசிக்காமல் படையினரின் நடுவே ஓட விட்டான். கையில் கிடைத்த பாண்டவவீரர்களை கசக்கியே துõக்கி எறிந்து விட்டான். அவனது யானையும் பாண்டவப் படையினரை துவம்சம் செய்தது. படைகள் பயந்து நடுங்கிய வேளையில், இக்கட்டான இந்த நிலையைக் கவனித்தார் தர்மர். அவர், தன் தம்பிக்கு சாரதியாக இருந்து வேறொரு இடத்தில் தேர் ஓட்டிக் கொண்டிருந்த கிருஷ்ண பகவான மனதில் தியானித்தார். பகதத்தன் இருக்கும் வரை எங்கள் படைக்கு ஆபத்து தான். பரந்தாமா நீ தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தார். நல்லவர்களின் பிரார்த்தனை இறைவனின் காதில் உடனே விழுந்து விடும். பகவான் கிருஷ்ணர் சிரித்தபடியே அர்ஜுனனிடம், அர்ஜுனா! இந்த இடத்தில் நாம் சண்டை செய்தது போதும். அங்கே பகதத்தன் நம் படையினரின் எண்ணிக்கையை வேகமாகக் குறைத்துக் கொண்டிருக் கிறான். அவனை அழிக்காவிட்டால் நம் படைக்கு பெருத்த சேதம் ஏற்படும். நான் அவன் இருக்குமிடம் நோக்கி தேரை ஓட்டுகிறேன். நீ அம்புப்பிரயோகம் செய்து பகதத்தனை அழித்து விடு, என்றார். ஒரே வினாடியில் பகதத்தன் இருக்குமிடத்தையும் அடைந்து விட்டார். பீமனை தேடிக்கொண்டிருந்த பகதத்தன், அர்ஜுனன் தன் கையில் சிக்கிவிட்டதால், பீமனைத் தேடும் எண்ணத்தைக் கைவிட்டு, அர்ஜுனனுடன் விற்போர் புரிந்தான். இருதரப்பும் சமபலத்துடன் விளங்கின. ஒரு வழியாக அர்ஜுனன் தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, பகதத்தன் அமர்ந்திருந்த யானையின் மீது அம்புகளைத் தொடுத்து அதை துண்டு துண்டாக்கினான். ஆத்திரமடைந்த பகதத்தன் ஒரு வேலை எடுத்து அர்ஜுனனனை நோக்கி வீசினான். அது அவன் மீது படாமல் இருக்கும் வகையில் கண்ணபிரான் எழுந்து நின்றார். அது அவரது உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.