திருப்புகழ் பாடல் 46 – திருச்செந்தூர்
தானனா தந்தனம் தானனா தந்தனம்
தானனா தந்தனம் …… தனதான
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் …… கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் …… தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் …… திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் …… வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் …… தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் …… மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் …… பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் …… பெருமாளே.