Thiruppugazh Song 52 – திருப்புகழ் பாடல் 52

திருப்புகழ் பாடல் 52 – திருச்செந்தூர்

தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் …… தந்ததானா

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்
குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் …… பண்புலாவக்

கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் …… தொன்றுபாய்மேல்

விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் …… செஞ்செநீடும்

வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்
விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந் …… தன்புறாதோ

படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்
துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் …… சிந்தும்வேலா

படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் …… கங்கைமான்வாழ்

சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் …… பொங்கிநீடும்

சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்
றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் …… தம்பிரானே.