திருப்புகழ் பாடல் 130 – பழநி
தனனத தானன தானன தானன
தனனத தானன தானன தானன
தனனத தானன தானன தானன …… தனதான
கரிய மேகம தோஇரு ளோகுழல்
அரிய பூரண மாமதி யோமுகம்
கணைகொ லோஅயில் வேலது வோவிழி …… யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
அரிய மாமல ரோதுளி ரோகரம்
கனக மேரது வோகுட மோமுலை …… மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
றிடைய தீரொரு நூலது வோவென
கனக மாமயில் போல்மட வாருடன் …… மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
வதனின் மேலென தாவியை நீயிரு
கமல மீதினி லேவர வேயருள் …… புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
மதனை யேவிழி யால்விழ வேசெயும்
சிவசொ ரூபம கேசுர னீடிய …… தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவு மேவடி வேல்விடு …… முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
மருவு வார்திரு மாலரி நாரணர்
பழைய மாயவர் மாதவ னார்திரு …… மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
குமர னேபதி னாலுல கோர்புகழ்
பழநி மாமலை மீதினி லேயுறை …… பெருமாளே.